Ashes 2021: இங்கிலாந்து அணி அவரை ஆடவைக்காதது எங்களுக்கே செம சர்ப்ரைஸாத்தான் இருந்துச்சு - ஸ்டீவ் ஸ்மித்

By karthikeyan VFirst Published Jan 3, 2022, 9:20 PM IST
Highlights

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராடை ஆடும் லெவனில் சேர்க்காதது ஆஸ்திரேலிய அணிக்கே வியப்பாக இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 2018-2019 ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்த நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது.

ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலக கோப்பைக்கு நிகராக மதிப்பிட்டு, அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆடும். இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும். ஆனால் இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி உப்புச்சப்பில்லாமல் ஆடிவருகிறது.

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி. அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும் படுமோசமான தோல்விகளை அடைந்தது இங்கிலாந்து அணி. 

பேட்டிங்,  பவுலிங் என இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு 3 டெஸ்ட்டிலும் வென்று 3-0 என தொடரை வென்றது. ஆஸ்திரேலிய அணிக்கு நேர்மாறாக இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங் என அனைத்து விதத்திலும் படுமோசமாக சொதப்பி படுதோல்விகளை அடைந்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் கேப்டன்சியும் மோசமாக இருந்தது. அணியினரை ஒன்றுதிரட்டி அவர்களிடமிருந்து, தான் விரும்பும்/சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர ரூட்டால் முடியவில்லை.

நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமாக ஆடிவருகிறது. இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனே சரியில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி குறித்து பேசியுள்ள ஸ்டீவ் ஸ்மித், ஸ்டூவர்ட் பிராடை பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆடவைக்காதது எங்களுக்கே(ஆஸ்திரேலிய அணி) வியப்பாகத்தான் இருந்தது. அந்த 2 ஆடுகளங்களுமே அவருக்கு பொருத்தமாக இருந்திருக்கும். அடிலெய்டில் பிராட் நன்றாக பந்துவீசினார். அவர் எப்போதுமே எனக்கு கடும் போட்டியாளராக இருந்திருக்கிறார். என்னை பலமுறை அவுட்டாக்கியும் இருக்கிறார். நானும் அவர் பவுலிங்கில் ஸ்கோர் செய்திருக்கிறேன். எனக்கும் பிராடுக்கும் இடையே நல்ல போட்டி இருந்திருக்கிறது. அவரை ஆடவைக்காதது எனக்கு வியப்புதான் என்று ஸ்மித் கூறியுள்ளார்.

ஆண்டர்சன் - பிராட் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான ஜோடியாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த தொடரில் ஆண்டர்சன், ராபின்சன், மார்க் உட், ஜாக் லீச் என்ற காம்பினேஷனுடன் தான் இங்கிலாந்து ஆடுகிறது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 5வது பவுலிங் ஆப்சனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!