
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதாகவும், இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் கடந்த 3 ஆண்டுகளாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டுவருகிறது.
ஆனால் அப்படி எந்தவிதமான விரிசலும் இல்லை. ரோஹித்துக்கும் தனக்கும் இடையே நல்ல புரிதலும் நல்ல உறவும் இருப்பதாக விராட் கோலி பலமுறை தெரிவித்திருக்கிறார். இதையே ரோஹித் சர்மாவும் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுமாதிரியான சர்ச்சை கருத்துகள் உலா வந்தாலும், அவற்றிற்கு மத்தியில் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் ரோஹித் - கோலி இடையேயான மோதல் என்ற பேச்சு ஹாட் டாபிக்கானது.
ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக விரும்பாத தன்னை, கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு, ரோஹித்தை கேப்டனாக நியமித்தது பிடிக்காததால், ரோஹித்தின் கேப்டன்சியில் ஆட விரும்பாத கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு கேட்டதாக தகவல் பரவியது.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூட கருத்து கூறியிருந்தார். இதுகுறித்து டுவீட் செய்திருந்த அசாருதீன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விலக்கு கேட்டுள்ளார் விராட் கோலி. டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக ரோஹித் ஆடவில்லை. கோலி ஓய்வு எடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சரியான நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். இது சரியான நேரம் அல்ல. ரோஹித் - கோலி இடையே பிளவு என்று பேசப்பட்டுவரும் வேளையில், கோலி விலக்கு கேட்பது, அதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது என்று அசாருதீன் பதிவிட்டிருந்தார்.
ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விலக்கெல்லாம் கேட்கவில்லை என்று தெரிவித்த கோலி, ரோஹித்துடனான உறவு குறித்தும் பேசினார். “எனக்கும் ரோஹித்துக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. இதையே இரண்டரை ஆண்டுகளாக சொல்லி சொல்லி நான் சோர்வடைந்துவிட்டேன். அணியை கீழே தள்ளும் எந்த செயலையும் நான் செய்யமாட்டேன். எனக்கும் ரோஹித்துக்கும் எந்த பிரச்னையும் இல்லை” என்று விராட் கோலி கூறினார்.
ஆனாலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், 2 வீரர்களும் (ரோஹித், கோலி) எதுவும் பேசாத வரை நாமாக எந்த முடிவுக்கும் வரக்கூடாது. அசாருதீன் ஏதோ சொல்லியிருக்கிறார். அசாருக்கு உள்விவகாரங்கள் எதுவும் தெரியும் என்றால் அதை வெளிப்படையாக கூறவேண்டும். ஆனால் மோதல் என்பது வெறும் சந்தேகமாக மட்டுமே இருக்கும்பட்சத்தில், சந்தேகத்தின் பலனை நான் 2 வீரர்களுக்குமே வழங்குவேன். ஏனெனில் அவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு அபாரமான பங்களிப்பை செய்திருக்கின்றனர். எனவே அவர்களை நோக்கி நாம் விமர்சனங்களை வைப்பது சரியாக இருக்காது என்று தான் நினைப்பதாக கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.