
கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார் கோலி. டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு பின் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என இந்திய அணி வென்றது. அதன்பின்னர் தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித் ஆடவில்லை. எனினும் இந்திய அணி, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இப்போது இலங்கை என தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவருகிறது.
அதன்பின்னர் ஐபிஎல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20, இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், டி20 உலக கோப்பை என இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் ஆடவுள்ளது.
இந்நிலையில், தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவரும் இந்திய வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவதே கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவரும் இந்திய வீரர்களை மனதளவிலும், உடலளவிலும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருந்து, அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவதுதான் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கடும் சவாலான பணியாக இருக்கும்.
2 மாதம் ஐபிஎல் தொடர், அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் டி20 தொடர் என தொடர்ச்சியாக இந்திய அணி கிரிக்கெட் ஆடுவதால், வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை பெறுவது ரோஹித்துக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.