கோலியும் சூர்யகுமாரும் வந்துவிட்டால் ஷ்ரேயாஸ் ஐயரின் நிலை என்ன?எந்த வரிசையில் அவரை இறக்கலாம்? கவாஸ்கர் கருத்து

By karthikeyan VFirst Published Feb 28, 2022, 6:02 PM IST
Highlights

விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் டி20 கிரிக்கெட்டில் மீண்டும் இந்திய அணிக்குள் வந்துவிட்டால், இலங்கைக்கு எதிரான தொடரில் அபாரமாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயரின் நிலை என்ன? அவரை எந்த பேட்டிங் ஆர்டரில் இறக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆடாததால், ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், தனக்கான இடத்தை பிடிக்க மிகச்சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருந்த ஷ்ரேயாஸ் ஐயர், அபாரமாக விளையாடினார்.

முதல் டி20 போட்டியில் 28 பந்தில் 57* ரன்கள், 2வது டி20 போட்டியில் 44 பந்தில் 74* ரன்கள், 3வது டி20 போட்டியில் 45 பந்தில் 73* ரன்கள் என்ற 3 டி20 போட்டிகளிலும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், ஒரு போட்டியில் கூட அவுட் ஆகவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவுட்டே ஆகாமல் 3 அரைசதம் அடித்து, தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரான 3ம் வரிசையில் இறங்கி, 3 மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடி தன்னை புறக்கணிக்கமுடியாதபடி முத்திரை பதித்தார். ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங், தேர்வாளர்களுக்கும் இந்திய அணி நிர்வாகத்திற்கும் இனிமையான தலைவலி.

விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் அணிக்குள் வந்துவிட்டால், இவ்வளவு சிறப்பாக பேட்டிங் ஆடியும் ஷ்ரேயாஸ் ஐயர், அணிக்கு வெளியே பென்ச்சில் உட்கார நேருமோ என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், விராட் கோலி வந்துவிட்டால் அவர்தான் கண்டிப்பாக 3ம் வரிசையில் பேட்டிங் ஆடுவார். அவரது இடத்தை ஷ்ரேயாஸை வைத்து நிரப்பமுடியாது. சூர்யகுமார் யாதவும் அணியில் இருப்பார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரையும் ஆடும் லெவனில் எடுக்கலாம். ஷ்ரேயாஸ் ஐயரை 4ம் வரிசையிலும் சூர்யகுமாரை 5ம் வரிசையிலும் இறக்கலாம். ஷ்ரேயாஸ், சூர்யகுமார் ஆகிய இருவருமே ஆடும் லெவனில் இடம்பெற்றால், பேட்டிங் ஆடத்தெரிந்த ஒரு பவுலரை அணியில் எடுக்க முடியாது. தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்களுக்கு அணியில் இடம் இருக்காது. 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களுடன் களமிறங்குவதாக இருந்தால், ஷ்ரேயாஸ்- சூர்யகுமார் ஆகிய இருவரையுமே ஆடும் லெவனில் சேர்க்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!