அவங்கள ஸ்லெட்ஜிங் செஞ்சுதான் பாருங்களேன்.. தென்னாப்பிரிக்க ரசிகர்களை எச்சரிக்கும் ஆஸி., முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Feb 17, 2020, 5:18 PM IST
Highlights

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரையும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை வைத்து கிண்டல் செய்தால் அது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகத்தான் முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் எச்சரித்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோர் தடை பெற்றனர். 

ஸ்மித் தனது கேப்டன்சியையும் இழந்தார். அதன்பின்னர் ஓராண்டு தடைக்கு பிறகு இருவரும் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்து, தடைபெறுவதற்கு முன்பு ஆடியதைவிட, மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவருகின்றனர். உலக கோப்பையில் வார்னர் அசத்தினார். ஆஷஸ் தொடரில் ஸ்மித் ஜொலித்தார். 

இருவரும் அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து வருகின்றனர். அவர்கள் இருவரும் செய்த தவறை உணர்ந்து, அதற்காக கண்ணீர் சிந்தி வருந்தியபிறகும், வெளிநாட்டு ரசிகர்கள் அவர்களை விடுவதாயில்லை. உலக கோப்பையில் இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான போட்டியில், ரசிகர்கள் ஸ்மித்தை கிண்டல் செய்தனர். களத்தில் இருந்தபோதே, உடனடியாக ரசிகர்களை கிண்டல் செய்ய வேண்டாம், உற்சாகப்படுத்துங்கள் என வலியுறுத்தினார். 

உலக கோப்பையில் ஆடியபோதும் சரி, ஆஷஸ் தொடரில் ஆடியபோதும் சரி, இங்கிலாந்து ரசிகர்கள், ஸ்மித்தையும் வார்னரையும் பயங்கரமாக கிண்டல் செய்ததுடன், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை சுட்டிக்காட்டி வம்பு இழுத்தனர். ஆனால் இதையெல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்திருந்த அவர்கள் இருவரையும், இந்த கேலியும் கிண்டலும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. 

இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பின்னர், முதல் முறையாக அவர்கள் இப்போது தென்னாப்பிரிக்காவிற்கு செல்லவுள்ளனர். எனவே தென்னாப்பிரிக்க ரசிகர்கள், கண்டிப்பாக அவர்களை கிண்டல் செய்யக்கூடும். ஆனால் அப்படி கிண்டல் செய்தால், அது தென்னாப்பிரிக்காவிற்கு பாதகமாகவே முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். 

Also Read - இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை வஞ்சப்புகழ்ச்சி செய்த முன்னாள் கேப்டன்

இதுகுறித்து பேசியுள்ள ஸ்டீவ் வாக், ஸ்மித் மற்றும் வார்னரை ஸ்லெட்ஜிங் செய்தால் அவர்கள் அதை இருகரம் நீட்டி வரவேற்பதுடன் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். கண்டிப்பாக கேலி கிண்டல்கள் இருக்கத்தான் செய்யும். இங்கிலாந்தில் அவர்களை ஸ்லெட்ஜிங் செய்து பார்த்தார்கள். ஆனால் பருப்பு வேகவில்லை. இருவரும் மிகச்சிறப்பாக ஆடினர். எனவே அதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் கண்டிப்பாக நடக்கும். ஆனால் அது வெறுப்புணர்வை கக்கும் விதமாக இருக்கக்கூடாது. ஒரு லிமிட்டாக ஜாலியாக மட்டுமே இருந்தால் நல்லது. தென்னாப்பிரிக்க ரசிகர்கள், ஸ்மித்தையும் வார்னரையும் ஸ்லெட்ஜிங் செய்தால், அது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாகவும் தென்னாப்பிரிக்காவுக்கு பாதகமாகவும் தான் முடியும். ஏனெனில் ஸ்லெட்ஜிங்கை கண்டிப்பாக எதிர்பார்த்திருக்கும் அவர்கள், அதற்கெல்லாம் சேர்த்து பேட்டிங்கில் பதிலடி கொடுப்பார்கள். அதனால் அவர்களை ஓவராக ஸ்லெட்ஜிங் செய்யாமல் இருப்பது நல்லது என்று தென்னாப்பிரிக்க ரசிகர்களை ஸ்டீவ் வாக் எச்சரித்துள்ளார். 
 

click me!