ஈகோவுக்குலாம் இங்க இடமே கிடையாது.. டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ்

By karthikeyan VFirst Published Feb 17, 2020, 4:15 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் இடம்பெறுவது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி கடந்த 2 ஆண்டுகளாக 3 ஃபார்மட்டிலும் படுமோசமாக ஆடிவருகிறது. அணியின் நட்சத்திர வீரர்களான டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், ஆம்லா ஆகியோர் அடுத்தடுத்து மிகக்குறுகிய இடைவெளியில் ஓய்வு அறிவித்ததால், அனுபவம் வாய்ந்த தரமான அந்த வீரர்கள் இல்லாமல், அவர்களது இடத்தை உடனடியாக நிரப்ப முடியாமல் திணறிவரும் தென்னாப்பிரிக்க அணி, தொடர்ச்சியாக படுதோல்விகளை சந்தித்துவருகிறது.

உலக கோப்பையில் டுப்ளெசிஸ் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி படுமோசமாக சொதப்பி லீக் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பின்னர் இந்திய அணியிடம் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-1 என சமன் செய்தது. அந்த தொடரில் டி20 அணிக்கு டி காக் தான் கேப்டனாக செயல்பட்டார். 

தென்னாப்பிரிக்க அணியை மேம்படுத்தும் நோக்கில் புதிய தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சரும், கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இயக்குநராக க்ரேம் ஸ்மித்தும், பேட்டிங் பயிற்சியாளராக ஜாக் காலிஸும் நியமிக்கப்பட்டனர். 

இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்கு வலுவான அணியுடன் சென்று கோப்பையை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. அந்தவகையில் மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளரானதுமே, டிவில்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார். 

டி காக்கின் தலைமையில் இங்கிலாந்தை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க அணி, ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு தொடர்களிலுமே சிறப்பாக ஆடியது. தொடரை வெல்ல முடியாமல் போனாலும் அந்த அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. 

டுப்ளெசிஸும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், டி காக்கின் தலைமையிலான டி20 உலக கோப்பைக்கான அணியில் டிவில்லியர்ஸ் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

மார்க் பவுச்சர், டிவில்லியர்ஸை மீண்டும் அணியில் சேர்த்து வலுவான அணியுடன் உலக கோப்பையில் ஆட வேண்டும் என்று விரும்புகிறார். டிவில்லியர்ஸுக்கும் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடும் ஆசை இருப்பதால், அவர் டி20 உலக கோப்பையில் ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read - இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை வஞ்சப்புகழ்ச்சி செய்த முன்னாள் கேப்டன்

இதுகுறித்து பேசிய மார்க் பவுச்சர், நான் டிவில்லியர்ஸுடன் தொடர்பில் தான் இருக்கிறேன். டிவில்லியர்ஸ் குறித்த அப்டேட் விரைவில் வரும். நான் ஹெட் கோச்சாக பொறுப்பேற்றதிலிருந்தே, சிறந்த வீரர்களை கொண்ட வலுவான அணியுடன் உலக கோப்பைக்கு செல்ல வேண்டும் என்று கூறிவருகிறேன். டிவில்லியர்ஸ் நல்ல ஃபார்மில் இருந்து, நாங்கள் கூப்பிடும்போது வருவாரேயானால், அவர் கண்டிப்பாக டி20 உலக கோப்பையில் ஆடுவார். இதில் ஈகோவுக்கெல்லாம் இடம் கிடையாது. வலுவான அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு சென்று டி20 உலக கோப்பையை வெல்வதுதான் நோக்கம் என்று மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். 

click me!