பேட்ஸ்மேனை ஏமாற்றும் வித்தையில் கெட்டிக்கார பவுலர் அந்த இந்தியர்! அவரது பவுலிங்கில் ஆடுவது கடினம் - ஸ்மித்

By karthikeyan VFirst Published Jun 19, 2020, 6:35 PM IST
Highlights

இந்திய ஸ்பின்னரின் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினம் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித். விராட் கோலிக்கு நிகரான வீரராக ஸ்மித் திகழ்கிறார். விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருக்கிறார் ஸ்மித். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் அபாரம். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவித்துவருகிறார் ஸ்மித். 

மரபார்ந்த பேட்டிங் ஸ்டைல் அல்லாத, வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலையும் சிறந்த டெக்னிக்கையும் கொண்ட வீரர் ஸ்மித். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் 7 இன்னிங்ஸில் 774 ரன்களை குவித்தார் ஸ்மித். ஸ்மித் 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 சதங்களுடன் 7227 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 62.84.

சிறந்த பேட்ஸ்மேன்களில் பலரும் கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் சரியாக ஆடி ரன்களை குவிக்க முடியாமல் திணறியுள்ளனர். ஆனால் ஸ்மித் அப்படியல்ல; சொந்த மண்ணான ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாது, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என உலகின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கே, இந்தியாவில் ஸ்பின்னர்களை திறம்பட சமாளிக்கமுடியாமல் சோடை போயுள்ளார். ஆனால் ஸ்மித், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங், உள்நாடு, வெளிநாடு என அனைத்து கண்டிஷன்களிலும் அனைத்து பவுலிங்கையும் திறமையாக எதிர்கொண்டு ஆடுபவர். 

அந்தவகையில், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜாவின் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்வது கடினம் என்றும் அவர் சவாலான பவுலர் என்றும் புகழ்ந்துள்ளார். 

“துணைக்கண்டத்தில் ஜடேஜாவின் பவுலிங்கில் ஆடுவது மிகக்கடினம். மிக துல்லியமான லைன் அண்ட் லெந்த்தில் வீசக்கூடியவர் ஜடேஜா. அதுமட்டுமல்லாமல் நல்ல வேரியேஷனில் வீசுவார். ஒரு பந்து வழுக்கிக்கொண்டு செல்லும், ஒரு பந்து திடீரென திரும்பும். ஆனால் அவரது கையசைவுகளை வைத்து அவரது பவுலிங்கை கணிக்க முடியாது. சரியான லெந்த்திலும், நல்ல வேரியேஷனுடனும் வீசுவதுதான் அவரது பலம். 

லெக் ஸ்பின்னர்கள் கூக்ளி வீசுவார்கள். ஆனால் ஆஃப் ஸ்பின்னர்களை பொறுத்தமட்டில், அவர்கள் கையின் வேகத்தை மாற்றாமல், பந்தின் வேகத்தை மட்டும் மாற்றி வீசுவதுதான் அவர்களின் பலம். அந்த வித்தையில் உலகளவில் வெகுசிலரே கெட்டிக்காரர்கள். அந்த சிலரில் ஜடேஜாவும் ஒருவர். அவரது பவுலிங்கை ஆடுவது கடினம் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார். 
 

click me!