என் வாழ்நாளின் சிறந்த பந்து அதுதான்..! முதல் போட்டியிலயே லெஜண்ட் டிராவிட்டின் ஸ்டம்ப்பை கழட்டிய பாக்., பவுலர்

By karthikeyan VFirst Published Jun 19, 2020, 2:27 PM IST
Highlights

பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் சொஹைல் தன்வீர் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டாக ராகுல் டிராவிட்டை வீழ்த்திய சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். 
 

பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டுக்கு பல தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொடுத்துள்ளது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பாகிஸ்தான் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருக்கிறது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி, முகமது ஆசிஃப், முகமது ஆமீர், ஜுனைத் கான், வஹாப் ரியாஸ், சொஹைல் தன்வீர் என பாகிஸ்தான் அணி எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த பவுலர்களை கொண்டுள்ளது. 

அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான சொஹைல் தன்வீர், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக ஆடியதில்லை. 62 ஒருநாள் போட்டிகள் மற்றும் வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கும். அந்தவகையில், சொஹைல் தன்வீருக்கும் அப்படித்தான். அதிலும், முதல் டெஸ்ட் போட்டியே இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் ஆடினார். 2007ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த அணியில் சொஹைல் தன்வீரும் இருந்தார். ஃபாஸ்ட் பவுலர் உமர் குல் காயம் காரணமாக கடைசி நேரத்தில் அந்த தொடரில் ஆடமுடியாமல் போனதால் சொஹைல் தன்வீர் வாய்ப்பு பெற்றார்.

டெல்லியில் நடந்த முதல் டெஸ்ட் மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே, அவரது கெரியரில் அவர் ஆடிய 2 டெஸ்ட் போட்டிகள். டெல்லியில் நடந்த முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அத்துடன் அவரது டெஸ்ட் கெரியர் முடிந்துவிட்டது. 

இந்நிலையில், அந்த டெஸ்ட் தொடர் குறித்தும், தனது முதல் டெஸ்ட் விக்கெட்டாக, டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட்டை வீழ்த்தியது குறித்தும் சொஹைல் தன்வீர் மனம் திறந்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள சொஹைல் தன்வீர், 2007 இந்திய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் நான் இல்லை. ஒருநாள் அணியில் மட்டுமே இருந்தேன். ஆனால் உமர் குல் காயம் காரணமாக அந்த தொடரில் ஆடமுடியாமல் போனதால், நான் டெல்லி டெஸ்ட்டில் ஆடினேன். முதல் போட்டியில் முதல் விக்கெட்டாக ராகுல் டிராவிட்டை வீழ்த்தினேன். எனக்கு இன்றுவரை அந்த சம்பவம் நன்றாக நினைவிருக்கிறது. எனது வாழ்நாளின் சிறந்த பந்து அதுதான்.

எனக்கு நினைவிருக்கிறது. நான் ராகுல் டிராவிட்டை வீழ்த்திய அதே பந்தில், வாசிம் அக்ரமும் ஏற்கனவே ஒருமுறை ராகுல் டிராவிட்டை வீழ்த்தியிருக்கிறேன். வாசிம் அக்ரம் ராகுல் டிராவிட்டை அவுட்டாக்கிய அதே லைன்&லெந்த் தான் நான் வீசிய பந்தும். அவுட் ஸ்விங் ஆகி, ஆஃப் ஸ்டம்ப்பை கழட்டியது. எனது ட்ரீம் டெலிவரி அதுதான் என்று தன்வீர் நெகிழ்ந்துள்ளார். 

சொஹைல் தன்வீர், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார். 2008ல் முதல் ஐபிஎல் சீசனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றதில் சொஹைல் தன்வீரின் பங்களிப்பு மிக அதிகம். ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் பிரபலமான சர்வதேச வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், சொஹைல் தன்வீர், ஷேன் வாட்சன், யூசுஃப் பதான், ரவீந்திர ஜடேஜா என அப்போதைய இளம் வீரர்கள் தான், சிறப்பாக ஆடி ராஜஸ்தான் அணிக்கு ஐபிஎல் டைட்டிலை வென்று கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!