கழுத்தில் மட்டும் இல்ல.. கையிலயும் போட்டார் ஆர்ச்சர்.. எப்படி இருக்கார் ஸ்மித்..?

By karthikeyan VFirst Published Aug 18, 2019, 12:51 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித்துக்கு பின் கழுத்தில் பயங்கரமாக அடிபட்டது. ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய 77வது ஓவரின் இரண்டாவது பந்து, ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் அடித்தது. அடி பலமாக விழுந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ஸ்மித். 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 258 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் வழக்கம்போலவே நங்கூரம் போட்டு இங்கிலாந்து அணியை வெறுப்பேற்றினார் ஸ்மித். 

அபாரமாக ஆடிய ஸ்மித், 92 ரன்களில் வோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 8 ரன்களில் சதத்தை தவறவிட்டார் ஸ்மித். சதத்தை தவறவிட்டிருந்தாலும், சாதனையை தவறவிடவில்லை. இந்த 92 ரன்களுடன் சேர்த்து, ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். 6 முறை தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்த மைக் ஹசியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டினார் ஸ்மித். 

ஸ்மித்தின் விக்கெட்டுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி மளமளவென சரிய, 250 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதால் போட்டி டிராவில் முடிவது உறுதியாகிவிட்டது. 

இந்த போட்டியில் ஸ்மித்துக்கு பின் கழுத்தில் பயங்கரமாக அடிபட்டது. ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய 77வது ஓவரின் இரண்டாவது பந்து, ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் அடித்தது. அடி பலமாக விழுந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ஸ்மித். உடனடியாக ஃபிசியோ வந்து ஸ்மித்தை அழைத்து சென்றார். ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்ற ஸ்மித், சிடிலின் விக்கெட்டுக்கு பிறகு, சுமார் 40 நிமிடங்கள் கழித்து மீண்டும் களத்திற்கு வந்தார் ஸ்மித். அப்போது மீண்டும் ஆர்ச்சரின் பந்தின் இடது கையில் அடிபட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே ஸ்மித் அவுட்டாகிவிட்டார். 

ஸ்மித் தெளிவாகத்தான் இருந்தார். எனினும் பின்கழுத்து பகுதியில் அடிபட்டதால் அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. எக்ஸ்ரேவும் செய்யப்பட்டது. ஆனால் பயப்படும்படியாக எதுவும் இல்லை. அவர் நலமாகத்தான் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கையில் பட்ட அடியாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் ஸ்மித், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஃபீல்டிங் செய்யவில்லை. இன்றைய கடைசி நாள் ஆட்டத்திலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபீல்டிங் செய்ய அனுப்பப்படமாட்டார் என்றே தெரிகிறது. 

click me!