ICC WTC புள்ளி பட்டியல்: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து முதலிடம் பிடித்த இலங்கை.! 3ம் இடத்தில் இந்தியா

By karthikeyan VFirst Published Dec 3, 2021, 4:42 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற இலங்கை அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டைட்டிலை நியூசிலாந்து அணி வென்றது. 2021 - 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தொடர்கள் நடந்துவருகின்றன. 2023ம் ஆண்டு ஃபைனல் நடக்கவுள்ளது. தற்போது நடந்துவரும் டெஸ்ட் தொடர்கள் அனைத்தும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது.

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் டெஸ்ட்டில் 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி. 

2வது டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 29ம் தேதி தொடங்கி நடந்தது.  இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் நிசாங்கா 73 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்கள் அடித்தது. இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

49 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் மிடில் ஆர்டர் வீரர் தனஞ்செயா டி சில்வா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் பெரிய இன்னிங்ஸ் ஆடிய தனஞ்செயா 155 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். நிசாங்கா 66 ரன்கள் அடித்தார். கடைசி விக்கெட்டுக்கு தனஞ்செயாவுடன் இணைந்து சிறப்பாக ஆடி 38 ரன்கள் அடித்த எம்பல்டேனியா, கடைசி விக்கெட்டுக்கு இலங்கை அணி 124 ரன்கள் அடிக்க உதவினார்.

296 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணி 297 ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ஆர்டரை ரமேஷ் மெண்டிஸும் எம்பல்டேனியாவும் இணைந்து சரித்தனர். இருவருமே தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்த 132 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.  இதையடுத்து 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 100% வெற்றி விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 2ம் இடத்தில் 66.66 வெற்றி சதவிகிதத்துடன் பாகிஸ்தான் அணி உள்ளது. 50 வெற்றி சதவிகிதத்துடன் இந்திய அணி 3ம் இடத்தில் உள்ளது.
 
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன், இந்த புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும்.
 

click me!