டி20 உலக கோப்பைக்கான அணியை அறிவித்தது ஆசிய சாம்பியன் இலங்கை

By karthikeyan VFirst Published Sep 16, 2022, 5:50 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான தசுன் ஷனாகா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை  ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. டி20 உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆசிய கோப்பையை வென்று ஆசியாவின் புதிய சாம்பியனாக உருவெடுத்துள்ள இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - பாபர் அசாமிடம் படிச்சு படிச்சு சொன்னேன்; அவரு கேட்கல! இவ்ளோ சீக்கிரம் கெடுத்துட்டாங்க- முன்னாள் வீரர் வருத்தம்

தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி ஆசிய கோப்பையில் பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்லாமல் களமிறங்கியது. முதல் லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த இலங்கை அணி, அதன்பின்னர் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 

சூப்பர் 4 சுற்றில் இந்தியா, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளையும் வீழ்த்தியதுடன், ஃபைனலிலும் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்று 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்று ஆசியாவின் சாம்பியனானது இலங்கை அணி.

ஆசிய கோப்பையை வென்ற அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் டி20 உலக கோப்பையில் ஆடவுள்ளது இலங்கை அணி. தசுன் ஷனாகா கேப்டன்சியில் 15 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணியில் தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ், பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, பானுகா ராஜபக்சா, வனிந்து ஹசரங்கா, தீக்‌ஷனா ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பையில் அறிமுகமாகி அசத்திய இளம் ஃபாஸ்ட் பவுலர் பிரமோத் மதுஷன் டி20 உலக கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார். ஆசிய கோப்பையில் ஆடிராத வாண்டர்சே, லஹிரு குமாரா ஆகியோரும் டி20 உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம்

டி20 உலக கோப்பைக்கான இலங்கை அணி:

தசுன் ஷனாகா(கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ், பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹிரு குமாரா, தில்ஷான் மதுஷங்கா, பிரமோத் மதுஷன்.
 

click me!