இலங்கை அணியின் மானம் காத்த தனஞ்செயா டி சில்வா சதத்தை தவறவிட்டார்..! இங்கிலாந்துக்கு ஒரளவிற்கு நல்ல இலக்கு

By karthikeyan VFirst Published Jul 1, 2021, 10:04 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 241 ரன்கள் அடித்து 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை இந்திய நேரப்படி 5.30 மணிக்கு தொடங்கிய 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி 50 ஓவரில் 241 ரன்கள் அடித்தது.

கேப்டனும் தொடக்க வீரருமான குசால் பெரேரா 2வது ஓவரிலேயே டக் அவுட்டானார். குசால் பெரேராவை டக் அவுட்டாக்கிய சாம் கரன், அதே ஓவரிலேயே 3ம் வரிசையில் இறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோவை 2 ரன்னில் வீழ்த்தினார். தனது அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான நிசாங்காவையும் 5 ரன்னில் வீழ்த்தினார் சாம் கரன். 

அவரைத்தொடர்ந்து சாரித் அசலங்காவும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். டேவிட் வில்லியின் பந்தில் அசலங்கா அவுட்டாக, வெறும் 21 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. அந்த மோசமான நிலையிலிருந்து இலங்கை அணியை தனஞ்செயா டி சில்வா சிறப்பாக ஆடி மீட்டெடுத்தார்.

தனஞ்செயா டி சில்வாவுடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹசரங்கா நன்றாக ஆடினார். ஆனால் அவரும் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் தனஞ்செயா டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்த ஷனாகா சிறப்பாக ஆடினார். அபாரமாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கிச்சென்ற தனஞ்செயா டி சில்வா 91 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஷனாகா 47 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 50 ஓவரில் 241 ரன்கள் அடித்த இலங்கை அணி, 242 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. 
 

click me!