#SLvsIND சாமிகா கருணரத்னேவின் கடைசி நேர அதிரடியால் சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்த இலங்கை

By karthikeyan VFirst Published Jul 18, 2021, 7:06 PM IST
Highlights

சாமிகா கருணரத்னேவின் கடைசி நேர அதிரடியால் 50 ஓவரில் 262 ரன்களை அடித்த இலங்கை அணி, 263 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடந்துவருகிறது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இந்த போட்டி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளனர். 2019 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இணைந்து ஆடிராத குல்தீப் யாதவ் - யுஸ்வேந்திர சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி இந்த போட்டியில் மீண்டும் இணைந்து ஆடினர்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் மினோத் பானுகா ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இந்திய ஃபாஸ்ட் பவுலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹரின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு, முதல் விக்கெட்டுக்கு  49 ரன்களை சேர்த்தனர். 

அவிஷ்கா ஃபெர்னாண்டோவை 32 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்தார் யுஸ்வேந்திர சாஹல். அதைத்தொடர்ந்து மினோத் பானுகா(27) மற்றும் பானுகா ராஜபக்சா(24) ஆகிய இருவரையும் குல்தீப் யாதவ் வீழ்த்த, 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.

அதன்பின்னர் தனஞ்செயா டி சில்வாவை 14 ரன்னில் க்ருணல் பாண்டியா வீழ்த்த, ஹசரங்கா மற்றும் கேப்டன் தசுன் ஷனாகா ஆகிய இருவரும் ஓரளவிற்கு நன்றாக ஆடி முறையே 38 மற்றும் 39 ரன்கள் அடித்தனர். பின்வரிசையில் இறங்கிய சாமிகா கருணரத்னே பொறுப்புடன் ஆடி 35 பந்தில் 43 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 262 ரன்கள் அடித்த இலங்கை, 263 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி அந்த சவாலான இலக்கை விரட்டிவருகிறது. இந்திய அணி சார்பில், ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹர் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
 

click me!