T20 World Cup பெரேரா, அசலங்கா, ராஜபக்சாவின் பொறுப்பான பேட்டிங்கால் ஆஸி.,க்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது இலங்கை

By karthikeyan VFirst Published Oct 28, 2021, 9:26 PM IST
Highlights

குசால் பெரேரா, அசலங்கா, ராஜபக்சா ஆகிய மூவரின் பொறுப்பான அதிரடி பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.
 

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே அவற்றின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், 2வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்த போட்டியில் ஆடிவருகின்றன.

துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பனி, 2வது இன்னிங்ஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; 2வது இன்னிங்ஸில் பந்துவீசுவது கடினமாக இருக்கும் என்பதால், முதலில் பந்துவீசிவிட்டு இலக்கை விரட்ட முடிவு செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்.

ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

கடந்த போட்டியில் ஆடாத இலங்கை அணியின் மாயாஜால ஸ்பின்னர் மஹீஷ் தீக்‌ஷனா இந்த போட்டியில் ஆடுவதால்,  பினுரா ஃபெர்னாண்டோ அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை அணி:

குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் நிசாங்கா 7 ரன்னில் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அசலங்காவும் குசால் பெரேராவும் இணைந்து அருமையாக ஆடினர். கடந்த போட்டியில் அவுட்டே ஆகாமல் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த அசலங்கா, அதே ஃபார்மில் அந்த இன்னிங்ஸில் விட்ட இடத்திலிருந்து இந்த இன்னிங்ஸை தொடர்ந்தார்.

மேக்ஸ்வெல் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸரை விளாசி அசத்திய அசலங்கா, அதன்பின்னர் தனது அதிரடியை தொடர்ந்தார். அசலங்காவும் பெரேராவும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 63 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய அசலங்கா மற்றும் பெரேரா ஆகிய இருவரும் தலா 35 ரன்களில் முறையே 10 மற்றும் 11வது ஓவர்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணிக்கு பிரச்னை ஆரம்பித்தது.

அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும் ஏமாற்றமளித்து தலா 4 ரன்களில் வெளியேற, ராஜபக்சா அதன்பின்னர் பொறுப்பை  தனது தோள்களில் சுமந்து அதிரடியாக அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 26 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்கள் அடிக்க, 20 ஒவரில் இலங்கை அணி 154 ரன்கள் அடித்து 155 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!