T20 World Cup: Australia vs Sri Lanka டாஸ் ரிப்போர்ட்.. இலங்கை அணியின் நட்சத்திர வீரர் கம்பேக்..!

By karthikeyan VFirst Published Oct 28, 2021, 7:26 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதுகின்றன. இரு அணிகளுமே அவை ஆடிய முதல் போட்டியில் வெற்றியை பெற்று, அதே உத்வேகத்துடன் இந்த போட்டியில் மோதுகின்றன.

சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவையும், இலங்கை அணி வங்கதேசத்தையும் வீழ்த்தி வெற்றி பெற்றன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் முறையே புள்ளி  பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளன. நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இலங்கை அணி 2ம் இடத்தில் உள்ளது. ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி  பெற்ற இங்கிலாந்து அணி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

புள்ளி பட்டியலின் முடிவை தீர்மானிப்பதில் இன்றைய ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் டி20 சர்வதேச போட்டிகளில் இதுவரை ஆடிய 16 போட்டிகளில் இரு அணிகளுமே தலா 8 வெற்றிகளை பெற்றுள்ளன. இந்த 2 அணிகளில் எந்த அணியும் எந்த அணியின் மீதும் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால் டி20 உலக கோப்பையை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றி கூடுதலாக பெற்றுள்ளது. டி20 உலக கோப்பைகளில் இந்த 2 அணிகளும் மோதிய 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 2 முறையும், இலங்கை அணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.

2010ம் ஆண்டுக்கு பிறகு டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதே இல்லை. 11 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதுகின்றன.

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 2வது இன்னிங்ஸில் பனி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முதலில் பந்துவீச முடிவு செய்தார் ஃபின்ச். 2வது இன்னிங்ஸில் பந்துவீசுவதை சவாலாக்கும் பனி. அது பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும்.அதனால் இலக்கை விரட்ட முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் ஆடுகிறது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

கடந்த போட்டியில் ஆடாத இலங்கை அணியின் மாயாஜால ஸ்பின்னர் மஹீஷ் தீக்‌ஷனா இந்த போட்டியில் ஆடுகிறார். அவரது வருகை இலங்கை அணிக்கு வலுசேர்க்கும். தீக்‌ஷனா அணியில் இணைந்ததால், பினுரா ஃபெர்னாண்டோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி:

குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா.
 

click me!