பயிற்சியில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா..! உற்சாகத்தில் இந்திய அணி.. செம குஷியில் ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Oct 28, 2021, 5:43 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை தழுவிய இந்திய அணி, அடுத்து நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பயிற்சியில் பந்துவீசிய சம்பவம், இந்திய அணிக்கு உத்வேகத்தையும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
 

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கபில் தேவுக்கு நிகராக பேசப்பட்டவர்/மதிப்பிடப்பட்டவர். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே அணியில் தனக்கென்று நிரந்தர இடத்தை பிடித்து, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தவர்.

இந்திய அணியின் முக்கியமான வீரராக ஜொலித்துக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு வினையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை  தொடர். அந்த தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.

முழு ஃபிட்னெஸுடன் இல்லாததாலேயே அவரால் பவுலிங்கும் வீசமுடியாமல் போயிற்று. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை.

டி20 உலக கோப்பையில் அவர் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில்  பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் தோள்பட்டையில் காயமடைந்த பாண்டியா, 2வது இன்னிங்ஸில் களத்திற்கே வரவில்லை.

அவர் பந்துவீசாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் 6வது பவுலிங் ஆப்சன். ஆனால் அவர் பந்துவீசாததால் இந்திய அணி சரியாக 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் ஆடுவதால், 6வது பவுலிங் ஆப்சன் கிடையாது. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் அவர் பந்துவீசியாக வேண்டும். அப்படி வீசவில்லை என்றால் அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவது அவசியமற்றது. வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் ஹர்திக் பாண்டியாவை ஆடவைப்பது அணி காம்பினேஷனை பாதிக்கும். அந்த பாதிப்பைத்தான் பாகிஸ்தானுக்கு எதிராக அனுபவித்தது இந்தியா.

எனவே ஹர்திக் பாண்டியா பந்துவீசாத பட்சத்தில் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக, அணியின் காம்பினேஷனுக்கு வலுசேர்க்கும் வகையில் வேறு வீரரை ஆடவைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் உள்ளிட்ட பலர் வலியுறுத்திவருகின்றனர்.

இந்திய அணியின் மேட்ச் வின்னராக மதிப்பிடப்பட்ட பாண்டியா, இன்றைக்கு அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிற அளவுக்கு அவரது கெரியரில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டுவர அவர் பந்துவீச வேண்டியது அவசியம். ஹர்திக் பாண்டியா பந்துவீசுவது அவருக்கு மட்டுமல்ல; டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கும் மிக மிக முக்கியம்.

ஏற்கனவே பந்துவீசுமளவிற்கு ஃபிட்னெஸுடன் இல்லாததால் பந்துவீசாமல் இருந்த பாண்டியா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோள்பட்டை காயத்தால் அவர் பந்துவீசுவாரா என்பது கேள்வியாக இருந்த நிலையில், பயிற்சியின் போது பாண்டியா பந்துவீசியிருக்கிறார்.

வரும் 31ம் தேதி இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. பயிற்சியில் ஷர்துல் தாகூருடன் இணைந்து சில பந்துகளை வீசினார் ஹர்திக்  பாண்டியா. பேட்டிங் ஆடுவதற்கு முன், பந்துவீசுவிட்டுத்தான் சென்றிருக்கிறார்.

பாண்டியாவால் பந்துவீச முடிகிறதென்றால்  போட்டியில் கண்டிப்பாக குறைந்தபட்சம் 2 ஓவர்களையாவது அவரால் வீசமுடியும். அவர் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசினாலே அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும். முழு கோட்டாவும் வீசமுடிந்தால் இன்னும் நல்லது. ஆனால் உடனடியாக அவரை 4 ஓவர்கள் வீசவைக்க வாய்ப்பில்லை.

ஹர்திக் பாண்டியா பயிற்சியில் பந்துவீசியிருப்பது இந்திய அணிக்கு நல்ல சமிக்ஞை. அதனால் இந்திய அணி உற்சாகமும் உத்வேகமும் அடைந்துள்ளது. ரசிகர்களும் பாண்டியாவிடமிருந்து ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸை காண ஆவலுடனும், மகிழ்ச்சியிலும் உள்ளனர்.
 

click me!