SL vs AUS: அபார சதமடித்து இலங்கையை அபாயத்திலிருந்து காப்பாற்றிய அசலங்கா..! ஆஸி.,க்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Jun 21, 2022, 6:51 PM IST
Highlights

ஆஸி.,க்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் சாரித் அசலங்காவின் சதத்தால் 258 ரன்கள் அடித்து, 259 ரன்கள் என்ற ஓரளவிற்கு சவாலான இலக்கை ஆஸி.,க்கு நிர்ணயித்துள்ளது இலங்கை.
 

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் இலங்கை அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில், 4வது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை தொடரை வென்றுவிடும். ஆனால் ஆஸ்திரேலிய அணியோ தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமென்றால், இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கின.

இலங்கை அணி:

நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வாண்டர்சே, மஹீஷ் தீக்‌ஷனா.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மேத்யூ குனெமேன், ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி டாப் 3 வீரர்களான டிக்வெல்லா(1), நிசாங்கா(13) மற்றும் குசால் மெண்டிஸ்(14) ஆகிய மூவரும் 10 ஓவர்களுக்குள்ளாகவே அணியின் ஸ்கோர் வெறும் 34 ரன்களாக இருந்தபோதே ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் அசலங்காவும் தனஞ்செயா டி சில்வாவும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 4வது விக்கெட்டுக்கு 99 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த தனஞ்செயா டி சில்வா 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனாகா  4 ரன்களுக்கு நடையை கட்டினார்.

ஒருமுனையில் நிலைத்து ஆடிய அசலங்காவுடன் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெல்லாலகே சில ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடி அசலங்காவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். அதனால் அணியின் ஸ்கோர் கொஞ்சம் உயர்ந்தது. 35 பந்தில் 19 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழந்தார். 

இதையும் படிங்க - T20 WC-யில் ரோஹித் சர்மாவின் முக்கியமான துருப்புச்சீட்டாக இந்த வீரர் தான் இருப்பார்..! கவாஸ்கர் கருத்து

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய அசலங்கா சதமடித்தார். 106 பந்தில் 110 ரன்கள் அடித்து 48வது ஓவரின் 4வது பந்தில் அசலங்கா ஆட்டமிழக்க, 49 ஓவரில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. அசலங்காவின் சதத்தால் படுமோசமான ஸ்கோரை பதிவு செய்யாமல் நல்ல ஸ்கோரை அடித்து 259 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.
 

click me!