
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடந்த 2வது ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. தொடக்கம் முதலே ஹாங்காங் வீரர்கள் அதிரடியில் பட்டய கிளப்பினார்கள். ஓப்பனிங் வீரர் ஜீஷான் அலி 17 பந்தில் 2 சிக்சருடன் 23 ரன் எடுத்து அவுட் ஆனார்.
பின்பு களமிறங்கிய பாபர் ஹயாத் 4 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் அன்ஷி ராத் பவுண்டரிகளாக விளாசினார். நிஜகத் கானும் இலக்கை பவுலர்களை வெளுத்தெடுத்தார். ஸ்கோர் 118 ரன்கள் ஆக உயர்ந்த நிலையில், நன்றாக விளையாடிய அன்ஷி ராத் 46 பந்தில் 3 பவுண்டரியுடன் 48 ரன் எடுத்டு அவுட் ஆனார். ஆனாலும் மறுமுனையில் நிஜகத் கான் சூப்பர் அரை சதம் விளாசினார். 20 ஓவரில் ஹாங்காங் 149/4 ரன்கள் எடுத்தது. நிஜகத் கான் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் துஷ்மந்த சமீரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்பு எளிய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி ரன்கள் சேர்க்க தடுமாறியது. தொடக்க வீரர் குஷால் மெண்டிஸ் 11 ரன்னில் அவுட் ஆனார். ஓரளவு சிறப்பாக விளையாடிய கமில் மிஷாரா 19 ரன்னுக்கு வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் பதும் நிஷாங்கா சூப்பராக பேட்டிங் செய்தார். அவருக்கு குஷல் பெரரா ஒத்துழைப்பு கொடுத்தார்.
நிஷாங்கா சூப்பர் அரை சதம்
ஸ்கோர் 119 ஆக உயர்ந்தபோது நன்றாக விளையாடி அரை சதம் அடித்த நிஷாங்கா (44 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 68 ரன்) ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து குஷல் பெரரா (20), கேப்டன் சரித் அசலங்கா (2), கமிந்து மெண்டிஸ் (5) என பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 127/6 என பரிதவித்தது. ஆனால் பின்பு ஜோடி சேர்ந்த வனிந்து ஹசரங்கா (20 ரன் நாட் அவுட்), தாசுன் ஷனகா (6 ரன் நாட் அவுட்) அணியின் வெற்றியை உறுதி செய்தனர் இலங்கை அணி 18.5 ஓவரில் 6 விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஹாங்காங் பீல்டிங் மோசம்
இந்த போட்டியில் படுமோசமாக பீல்டிங் செய்த ஹாங்காங் வீரர்கள் 6 கேட்ச்களை தவற விட்டனர். இந்த கேட்ச்களை பிடித்து இருந்தால் அந்த அணி வெற்றி பெற்றிருக்கலாம். தோல்வி அடைந்து இருந்தாலும் இறுதி வரை இலங்கைக்கு மரண பயம் காட்டியுள்ளது ஹாங்காங்.