
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் குரூப் ஏ லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீர்ர்கள் அலிஷான் ஷராப்பு, கேப்டன் முகமது வாசிம் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள்.
முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 88 ரன்கள் சேர்ந்த நிலையில், நன்றாக விளையாடி அரை சதம் அடித்த அலிஷான் ஷராப்பு 38 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து ஆசிஃப் கான் 2 ரன்னில் வெளியேறினாலும் அதிரடியில் கலக்கிய கேப்டன் முகமது வாசிம் ரன் வேகம் தளராமல் பார்த்துக் கொண்டார். ஸ்கோர் 145 ஆக உயர்ந்தபோது முகமது ஜோஹைப் (21 ரன்) ஓரளவு சிறப்பாக விளையாடி அவுட் ஆனார்.
மறுபக்கம் சூப்பராக விளையாடிய முகமது வாசிம் 54 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 172 ரன்கள் எடுத்தது. பெரிய இலக்கை பின்பு களமிறங்கிய ஓமன் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்தது. ஆமிர் கலீம் (2), கேப்டன் ஜதீந்தர் சிங் (20), வாசிம் அலி (1), ஹம்மாத் மிர்சா (5), ஷா பைசல் (9) ஆகியோர் UAE. பந்துவீச்சை சமாளிக்க முடியால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஓமன் 5/50 என பரிதவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் அபார வெற்றி
இந்த சரிவில் இருந்து அந்த அணியால் மீள முடியவில்லை. இறுதிக் கட்டத்தில் ஆர்யன் பிஷ்ட் (24), விநாயக் சுக்லா (20), ஷகீல் அகமது (14) ஆகியோரின் கணிசமான பங்களிப்பு அணியின் தோல்வி வித்தியாசத்தை குறைக்க உதவியது. ஓமன் அணி 18.4 ஓவரில் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜுனைத் சித்திக் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹைதர் அலி, முகமது ஜவாதுல்லா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி
ஓமன் அணி விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து ஏறக்குறைய வெளியேறி விடட்து. ஓமனின் தோல்வி காரணமாக 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணி 2 புள்ளிகளை பெற்று பாகிஸ்தானுடன் (2 புள்ளிகள்) சம நிலையில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானை வீழ்த்தினால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.