சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வணிந்து ஹசரங்கா காயம் குணமாகாத நிலையில் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் வணிந்து ஹசரங்கா. இதுவரையில் 26 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 72 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 35 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ரூ.10.75 கோடிக்கு ஆர்சிபி அணிக்காக கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விளையாடினார். அதன் பிறகு கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது அவரை விடுவித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ரூ.1.50 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது. ஆனால், இதுவரையில் அவர் அணியுடன் இணையவில்லை. அவருக்கு இடது குதிகால் பகுதியில் ஏற்பட்ட காயம் குண்மடைய இன்னும் சில வாரங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இதுவரையில் அணியுடன் இணையவில்லை. இது குறித்து வணிந்து ஹசரங்கா தரப்பிலிருந்து கூறியிருப்பதாவது: விரைவில் அணியுடன் இணைவார் என்று கடந்த 29 ஆம் தேதி கூறப்பட்டுள்ளது. மேலும், பணம் ஒரு காரணமாக இருந்திருந்தால் ஐபிஎல் ஏலத்திற்கு அவரை ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு பதிவு செய்திருக்கலாம்.
ஆனால், கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் இதுவரையில் குணமடையவில்லை. அவர் இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனும் கூட. ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் அவர் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.