வில்லியம்சன் நல்ல கேப்டன் ஆச்சே.. பின்ன ஏன் இப்படி பண்ணாரு..?

By karthikeyan VFirst Published May 9, 2019, 11:02 AM IST
Highlights

டெல்லி அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் எடுத்த தவறான முடிவுதான் சன்ரைசர்ஸ் அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் முதலிரண்டு இடங்களில் இருந்த மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதின. இதில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

எலிமினேட்டர் போட்டியில் டெல்லியும் சன்ரைசர்ஸும் மோதின. இந்த போட்டியில் வென்ற டெல்லி அணி, முதல் தகுதிச்சுற்றில் தோற்ற சிஎஸ்கேவுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் நாளை மோதுகிறது. அந்த போட்டியில் வெல்லும் அணிதான் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும். 

இந்நிலையில், எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

சஹா ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய கப்டில் ஆட்டமிழந்த பிறகு, சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. மனீஷ் பாண்டேவும் வில்லியம்சனும் மிகவும் மந்தமாக ஆடினர். 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. 35 பந்துகள் பிடித்து 30 ரன்கள் மட்டுமே அடித்து மனீஷ் பாண்டே நடையை கட்ட, வில்லியம்சன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களில் விஜய் சங்கரும் முகமது நபியும் இணைந்து சில பெரிய ஷாட்டுகளை ரன்களை உயர்த்தினர். 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. 

163 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, அதிரடியாக தொடங்கினார். தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசினார். இந்த போட்டியில் பிரித்வி ஷா அடித்து ஆட, தவானோ 17 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அரைசதம் அடித்த பிரித்வி ஷாவும் 56 ரன்களில் அவுட்டானார்.

இதையடுத்து பொறுப்பு ரிஷப் பண்ட்டின் மீது இறங்கியது. நிதானமாக ஆடிய ரிஷப் பண்ட், விக்கெட்டை இழந்துவிடாமல் பொறுப்பாக ஆடினார். கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. இதை சன்ரைசர்ஸ் அணியால் கட்டுப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் 18வது ஓவரை பாசில் தம்பியிடம் கொடுத்தார் கேன் வில்லியம்சன். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள், 2 சிங்கிள் என மொத்தம் 26 ரன்கள் எடுக்கப்பட்டது. 

இந்த ஓவர் தான் சன்ரைசர்ஸ் அணிக்கு எமனாக அமைந்தது. இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையும் கூட. இந்த ஒரே ஓவரில் ஆட்டத்தை தலைகீழாக மாற்றி வெற்றியை உறுதி செய்துவிட்டார் ரிஷப் பண்ட். 17 ஓவர்கள் முடிந்த நிலையில், எஞ்சிய மூன்று ஓவர்களை கலீல் அகமது மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரை வீசவைத்து முடித்திருக்கலாம். கலீலுக்கு 2 ஓவர்களும் புவிக்கு 1 ஓவரும் மீதமிருந்தது. 

நன்றாக வீசிக்கொண்டிருந்த கலீலிடம் 18வது ஓவரையும் புவியிடம் 19வது ஓவரையும் கொடுத்துவிட்டு கடைசி ஓவரை கலீலை வீசவைத்திருக்கலாம். ஆனால் 18வது ஓவரை பாசில் தம்பியிடம் வழங்கினார் கேப்டன் கேன் வில்லியம்சன். அந்த ஓவரில் 26 ரன்களை குவித்து அந்த ஓவரிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்டார் ரிஷப் பண்ட். அதன்பின்னர் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். ரூதர்ஃபோர்டு மற்றும் ரிஷப் ஆகிய இருவரையுமே 19வது ஓவரில் வீழ்த்தினார். 

கடைசி 2 ஓவர்களில் டெல்லி அணிக்கு வெறும் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் புவனேஷ்வர் குமார் பிரேக் கொடுத்ததால் கடைசி ஓவரின் 5வது பந்தில்தான் டெல்லி அணியால் வெற்றி பெற முடிந்தது. 

எனவே 18வது ஓவரை கலீலிடம் கொடுத்து கொஞ்சம் கட்டுப்படுத்தியிருந்தால் டெல்லி அணிக்கு நெருக்கடியை அதிகரித்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கக்கூட வாய்ப்பு இருந்தது. ஆனால் கேப்டன் வில்லியம்சனின் தவறான பவுலிங் தேர்வால் அந்த வாய்ப்பு பறிபோய் சன்ரைசர்ஸ் அணி தோற்றது. 

பவுலிங் சுழற்சி, களவியூகம், ஃபீல்டிங் செட்டப் ஆகியவற்றில் கைதேர்ந்த சிறந்த கேப்டனான வில்லியம்சன், நன்றாக வீசிக்கொண்டிருந்த கலீலுக்கு பதிலாக தம்பியை 18வது ஓவரை வீசவைத்தது அதிர்ச்சியாகவே உள்ளது. 
 

click me!