டெல்லி கேபிடள்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. எலிமினேட்டரில் வெல்லப்போவது யார்..? ஓர் அலசல்

By karthikeyan VFirst Published May 8, 2019, 5:40 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி, 2வது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும். 
 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறின. 

முதல் இரண்டு இடங்களில் இருந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் முதல் பிளே ஆஃப் போட்டியில் மோதின. அந்த போட்டியில் சிஎஸ்கேவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி, 2வது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும். 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளில் எந்த அணி வெல்லும் என்பது குறித்து அலசுவோம். 

டெல்லி கேபிடள்ஸ் அணி இளம் வீரர்களை அதிகமாக கொண்ட அணி. ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா ஆகிய மூவருமே சிறந்த வீரர்கள். இந்த சீசனில் பிரித்வி ஷா கேகேஆர் அணிக்கு எதிராக அடித்த 99 ரன்களை தவிர சிறந்த இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. அதேநேரத்தில் அனுபவ தொடக்க வீரரான ஷிகர் தவான் செம ஃபார்மில் உள்ளார். அதிரடியான தொடக்கத்தை டெல்லி அணிக்கு அமைத்து கொடுத்துவருகிறார். 

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே இந்த சீசனில் அபாரமாக ஆடி ரன்களை குவித்து வருகின்றனர். இருவருமே நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு வலு சேர்க்கிறது. பவுலிங்கை பொறுத்தமட்டில் காசிகோ ரபாடா தான் அபாரமாக வீசி டெல்லி அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்தார். 12 இன்னிங்ஸ்களில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் அவர் தொடரிலிருந்து விலகி தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பியது அந்த அணிக்கு ஒரு இழப்புதான். 

எனினும் இஷாந்த் சர்மா அபாரமாக பந்துவீசிவருவதால் டெல்லி அணிக்கு பிரச்னை இல்லை. மேலும் அனுபவ பவுலர் டிரெண்ட் போல்ட்டும் இருக்கிறார். ஸ்பின் பவுலிங்கை பொறுத்தமட்டில் அமித் மிஷ்ரா, அக்ஸர் படேல், லாமிசன்னே ஆகிய மூவரும் மிரட்டுகின்றனர். 

டெல்லி அணியின் பலமே அந்த அணி வெளிநாட்டு வீரர்களை அதிகமாக சார்ந்திருக்கவில்லை. அதேநேரத்தில் மற்றொரு அணியான சன்ரைசர்ஸ் அணி, அந்த அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் - பேர்ஸ்டோவை அதிகமாக சார்ந்திருந்தது. அவர்கள் இருவரும் தொடரிலிருந்து விலகி சொந்த நாட்டிற்கு திரும்பிவிட்ட நிலையில், மார்டின் கப்டிலும் சஹாவும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கேன் வில்லியம்சன், விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக ஆட வேண்டிய அவசியம் உள்ளது. 

வார்னரும் பேர்ஸ்டோவும் இல்லாத நிலையில் மனீஷ் பாண்டே நல்ல எழுச்சி கண்டுள்ளார். அது அந்த அணிக்கு பலம். ஆனால் நல்ல பவுலிங் யூனிட்டாக அறியப்பட்ட சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பவுலர்கள் புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் ஆகியோர் இந்த சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. ரஷீத் கானின் பவுலிங்கே அடித்து நொறுக்கப்படுகிறது. இது அந்த அணிக்கு ஒரு பலவீனமாக உள்ளது. 

இதுவரை இரு அணிகளும் 14 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 9ல் சன்ரைசர்ஸும் 5 போட்டிகளில் டெல்லி அணியும் வென்றுள்ளன. நம்பரின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை டெல்லி வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளன. 

ஏனெனில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சீரான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தவில்லை. ஆனால் டெல்லி அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே சிறப்பாக உள்ளதோடு, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இந்த சீசனை பொறுத்தமட்டில் சன்ரைசர்ஸ் அணியை விட டெல்லி அணி சிறப்பாக ஆடிவந்திருக்கிறது. நடப்பு ஃபார்மின் அடிப்படையில் பார்த்தால் டெல்லி அணி சன்ரைசர்ஸை வீழ்த்துவதற்கான வாய்ப்பு அதிகம். 
 

click me!