ஹர்பஜன் சிங்கிற்காக அழுது மன்றாடினேன்.. ஆனாலும் நோ யூஸ்..! மனம் திறந்த ஸ்ரீசாந்த்

By karthikeyan VFirst Published Jun 25, 2020, 9:25 PM IST
Highlights

ஹர்பஜன் சிங் தன்னை கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்ரீசாந்த். 
 

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலரான ஸ்ரீசாந்த், இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 2013ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சூதாட்டப்புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதையடுத்து, வரும் செப்டம்பர் மாதத்துடன்  ஸ்ரீசாந்த்தின் தடை முடிவடைகிறது. 

எனவே அதன்பின்னர் உள்நாட்டு போட்டிகளில் கேரள அணிக்காக ஆடவுள்ளார். மீண்டும் களத்தில் இறங்கி கலக்கும் முனைப்பில் உள்ளார் ஸ்ரீசாந்த். தடை முடிந்து மீண்டும் களம் காண இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீசாந்த், ஊடகங்களுக்கு பேட்டியளித்துவருகிறார். 

அந்தவகையில், ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீசாந்த், தனது கெரியரில் தான் எதிர்கொண்ட சர்ச்சை சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

2008ல் ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் ஸ்ரீசாந்த் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடினார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் விளைவாக, அதன்பின்னர் அந்த தொடர் முழுவதும் ஆட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது. 

ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கிவிட்டு ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுத சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். அந்த சம்பவம் குறித்துத்தான் ஸ்ரீசாந்த் பேசியுள்ளார். 

அந்த சம்பவம் குறித்து பேசிய ஸ்ரீசாந்த், எனக்கும் ஹர்பஜன் சிங்குக்கும் இடையேயான அந்த மோதல் சம்பவம் அன்றிரவு சாப்பிடும்போதே முடிவுக்கு வந்துவிட்டது. அந்த போட்டி முடிந்ததும் சச்சின் டெண்டுல்கர் எங்களை சமாதானப்படுத்தி அனுப்பினார். நானும் ஹர்பஜனும் இணைந்து ஒன்றாக அமர்ந்துதான் இரவு உணவு உண்டோம். அத்துடன் அந்த சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், மீடியாதான் அதை பெரிதாக்கின.

அந்த சம்பவத்தை விசாரித்த விசாரணை ஆணையர் சுதீந்திர நானாவதியிடம், ஹர்பஜன் சிங்கிற்கு தடை எதுவும் விதித்துவிட வேண்டாம் என அழுது கெஞ்சினேன். நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து ஆட வேண்டிவரும். அவர் இந்திய அணியின் மேட்ச் வின்னர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ஹர்பஜன் எனக்கு அண்ணன். எனவே அவருக்கு தடை விதித்து வேண்டாம் என கெஞ்சியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 
 

click me!