உன் மொத்த வெறியையும் ஆஸ்திரேலியாவிடம் காட்டு..! உசுப்பேற்றிவிட்ட தோனி.. ஆஸி.,யை வதம் செய்த ஸ்ரீசாந்த்

By karthikeyan VFirst Published May 30, 2020, 9:58 PM IST
Highlights

ஸ்ரீசாந்த், தோனி தன்னை உசுப்பேற்றிவிட்ட சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். 
 

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கியதால் 2013ம் ஆண்டுக்கு பிறகு அவர் கிரிக்கெட் ஆடவில்லை. கடந்த ஆண்டுதான், அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டார். இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் மீதான தடை முடிகிறது. எனவே மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆர்வத்தில் உள்ளார் ஸ்ரீசாந்த். 

கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், மற்ற வீரர்களை விட ஸ்ரீசாந்த் தான் அதிகமான இண்டர்வியூ கொடுத்துவருகிறார். ஹெலோ லைவில் மட்டுமே இரண்டு முறை உரையாடியுள்ளார். 

இந்நிலையில், தற்போது மற்றொரு இண்டர்வியூ ஒன்றில் தோனி தன்னை உசுப்பேற்றிவிட்டு தனது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். 

தோனி மிகச்சிறந்த கேப்டன். ஒவ்வொரு வீரரிடமிருந்தும் அவர்களது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் உத்தியறிந்தவர். அந்தவகையில், மிகவும் ஆக்ரோஷமான ஸ்ரீசாந்திடம் அவரது பெஸ்ட் பவுலிங்கை வெளிக்கொண்டுவந்த சம்பவத்தைத்தான் ஸ்ரீசாந்த் பகிர்ந்துள்ளார். 

2007 டி20 உலக கோப்பையை தோனி தலைமையில் இந்திய அணி வென்றது. அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் ஸ்ரீசாந்த். ஸ்ரீசாந்த், அந்த உலக கோப்பையின் கடைசி மூன்று போட்டிகளில் அபாரமாக ஆடினார். கண்டிப்பாக வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மற்றும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக என கடைசி 3 போட்டிகளிலும் மிகச்சிறப்பாக பந்துவீசினார் ஸ்ரீசாந்த். 

இதில், குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அசத்தினார் ஸ்ரீசாந்த். ரிக்கி பாண்டிங் தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய ஆஸ்திரேலிய அணியை தனது வேகத்தில் மிரட்டினார். அந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 189 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. முக்கியமான அந்த போட்டியில், அசத்தலாக வீசிய ஸ்ரீசாந்த், 4 ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த 2 விக்கெட்டுகளும் மிக முக்கியமானவை. கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடன் ஆகிய இருவரையும் ஸ்ரீசாந்த் வீழ்த்தினார். 

டி20 உலக கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை, டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்கடித்து அனுப்பியது. 

அந்த போட்டி குறித்த சுவாரஸ்யமான தகவலைத்தான் ஸ்ரீசாந்த் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அந்த இண்டர்வியூவில் பேசிய ஸ்ரீசாந்த், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த அரையிறுதி போட்டிக்கு முன் தோனி என்னை உத்வேகப்படுத்தினார். சும்மா அங்கேயும் இங்கேயும் கோபப்பட்டுக்கொண்டு திரிகிறியே... அதையெல்லாம் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இப்போது காட்டு என்றார் தோனி.

தோனியின் அந்த வார்த்தைதான் என்னை உத்வேகப்படுத்தி எனது சிறந்த பவுலிங்கை வெளிக்கொண்டுவர உதவியது. தோனி மிகச்சரியான நேரத்தில் அதை செய்தார். ஹைடனுக்கு முதல் பந்து யார்க்கர் வீச முயற்சித்தேன். ஆனால் அதை அவர் பவுண்டரி அடித்துவிட்டார். ஷோயப் அக்தர் அதே மாதிரியான ஒரு பந்தில் ஹைடனை வீழ்த்தியிருந்தார். அதனால் நானும் அதே மாதிரி வீச நினைத்தேன். ஆனால் ஹைடன் பவுண்டரி அடித்தார்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே எண்ணம். 2003 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தியபோது, மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அப்போதிலிருந்தே, ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது. அது மட்டுமே எனது மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது என்றார் ஸ்ரீசாந்த். 
 

click me!