கண்டிப்பா ஐபிஎல் நடத்தியே தீரணுமா? அப்படினா இத பண்ணுங்க! பிசிசிஐக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் போட்ட கண்டிஷன்

By karthikeyan VFirst Published Mar 12, 2020, 3:55 PM IST
Highlights

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், பிசிசிஐ-க்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளது. 
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்துவருகிறது. உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் ஜெய்ப்பூர், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் என ஐபிஎல் நடக்கும் பல்வேறு நகரங்களில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலால், ஐபிஎல் நடப்பது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அங்கு வந்தால் கூட, எளிதாக பலருக்கும் பரவிவிடும் அபாயம் உள்ளது. எனவே ஐபிஎல்லை நடத்தக்கூடாது என்ற குரல்கள் வலுத்துள்ளன. 

மகாராஷ்டிரா அரசு, மும்பையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. கர்நாடக அரசும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடத்த பிசிசிஐ-க்கு மத்திய அரசு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 

இவ்வாறு ஐபிஎல் நடத்துவதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் இருந்துவரும் நிலையில், இதுகுறித்து விவாதிக்க வரும் 14ம் தேதி பிரிஜேஷ் படேலின் தலைமையில் ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, ஜெய் ஷா ஆகியோர் கலந்துகொண்டு விவாதிக்க உள்ளனர். 

இதற்கிடையே, வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வருவதற்கான விசாவிற்கு ஏப்ரல் 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல்லில் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவிற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஐபிஎல்லை நடத்தியே தீர வேண்டுமென்றால், போட்டியை காண ரசிகர்களை ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்காமல் வெறும் போட்டியை மட்டும் நடத்தலாம் என பிசிசிஐ-க்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் கண்டிஷன் போட்டுள்ளது. 

Also Read - டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? லெஜண்ட் லாராவின் கணிப்பு

ஒருவேளை அப்படி நடத்தப்பட்டால், ஐபிஎல் போட்டிகளின் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயும் பாதிக்கப்படாமல், தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான வருவாய் கிடைக்கும். போட்டியை நேரில் காண வரும் ரசிகர்கள் கொடுக்கும் டிக்கெட் வருவாய் பாதிக்கப்படும். ஆனால் ரசிகர்களே இல்லாமல் வீரர்கள் மட்டும் களத்தில் ஆடுவது, வீரர்களுக்கே சோர்வையும் தொய்வையும் ஏற்படுத்தும். எனவே ஐபிஎல்லை நடத்துவது குறித்து என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பதை சனிக்கிழமை வரை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

click me!