#SAvsSL சதத்தை தவறவிட்ட டீன் எல்கர்..! மெகா ஸ்கோரை நோக்கி தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Dec 27, 2020, 11:03 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி மெகா ஸ்கோரை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறது.
 

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 396 ரன்களை குவித்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா ஆகிய இருவரும் சொதப்பிய நிலையில், தினேஷ் சண்டிமால்(85), தனஞ்செயா டி சில்வா(79), ஷனாகா(66) ஆகிய மூவரின் சிறப்பான பேட்டிங்கால் இலங்கை அணி 396 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டீன் எல்கர் மற்றும் மார்க்ரம் ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 141 ரன்களை குவித்தனர். மார்க்ரம் 68 ரன்களில் ஆட்டமிழக்க, வாண்டர் டசன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 

மிகச்சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிய தொடக்க வீரர் டீன் எல்கர் 95 ரன்களில் ஆட்டமிழந்து ஐந்து ரன்களில் சதத்தை தவறவிட்டார். கேப்டன் குயிண்டன் டி காக் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினாலும், சீனியர் வீரர் டுப்ளெசிஸும் டெம்பா பவுமாவும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 55 ரன்களுடனும் பவுமா 41 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்துள்ளது. செட்டில் ஆன டுப்ளெசிஸ் மற்றும் பவுமா ஆகிய இருவரும் களத்தில் இருக்கின்றனர்; மேலும் ஆறு விக்கெட்டுகள் கையில் இருப்பதால் தென்னாப்பிரிக்க அணி மெகா ஸ்கோரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
 

click me!