தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்ட நிலையில் போட்டியானது 15 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது கியூபெர்காவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
அதன்படி வந்த திலக் வர்மா 29 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர், 56 ரன்களில் வெளியேறவே, ஜித்தேஷ் சர்மா 1 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் கோல்டன் டக்கில் வெளியேறினார்.
அவர் வந்ததுமே மழையும் வரவே போட்டியானது முடியும் நிலையில் நிறுத்தப்பட்டது. போட்டியின் 20ஆவது ஓவரை கெரால்டு கோட்ஸி வீசிக் கொண்டிருந்தார். அந்த ஓவரில் 2ஆவது பந்தில் ஜடேஜா ஆட்டமிழக்க 3ஆவது பந்தில் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்தார். இதையடுத்து மழை குறுக்கிடவே போட்டியானது நிறுத்தப்பட்டது.
ரிங்கு சிங் 68 ரன்களுடன் விளையாடி வருகிறார். முகமது சிராஜ் களத்தில் இருக்கிறார். போட்டியின் 19.3 ஆவது ஓவர் வரையில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக மழை பெய்த நிலையில், போட்டியானது 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 1 முதல் 5 ஓவர்கள் பவர்பிளே ஓவர்கள் ஆகும். ஒவ்வொரு வீரரும் 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.