இந்தியாவை வீழ்த்தணும்னா அதை செஞ்சே தீரணும்.. பக்காவா ப்ளான் போட்டு வச்சுருக்கும் டுப்ளெசிஸ்.. ஆனால் நடக்குமா?

By karthikeyan VFirst Published Oct 18, 2019, 5:27 PM IST
Highlights

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியிலாவது தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களை எடுத்தது. அந்த போட்டியில் முடிந்தவரை கடுமையாக போராடி தோற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி படுமோசமாக தோற்றது தென்னாப்பிரிக்க அணி. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. எனினும் கடைசி போட்டியிலாவது வென்று மரியாதையுடன் நாடு திரும்பும் முனைப்பில் உள்ளது தென்னாப்பிரிக்க அணி. 

அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் இவை என்பதால், நாளை ராஞ்சியில் தொடங்கும் கடைசி போட்டியில் வென்று புள்ளி பட்டியலில் தங்களது கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ளது தென்னாப்பிரிக்கா. ஆனால் அனுபவமான மற்றும் வலுவான இந்திய அணியை வீழ்த்துவது நடக்காத காரியம். 

இளம் வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த சுற்றுப்பயணம் பெரும் ஏமாற்றத்தையும் படுதோல்வியையும் வழங்கியது. முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது. இரண்டுமே மிகப்பெரிய தோல்வி.

அந்த அணியில் ஒரே நேரத்தில் டிவில்லியர்ஸ், ஹாசிம் ஆம்லா, டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் ஆகிய அணியின் மூத்த வீரர்கள் இல்லாமல் போனது பெரிய அடி. அதனால் அனுபவமில்லாத இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்களை கொண்ட இந்திய அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா படுதோல்வியை சந்தித்தது. 

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியிலாவது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களை எடுத்தது. அந்த போட்டியில் முடிந்தவரை கடுமையாக போராடியது. ஆனால் இரண்டாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி தோற்றது. முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 502 ரன்களையும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 602 ரன்களையும் குவித்தது இந்திய அணி. இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோரை அடித்ததுதான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 

எனவே முதல் இன்னிங்ஸில் அதிகமான ஸ்கோரை அடிப்பதுதான் வெற்றிக்கான வழி என தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள டுப்ளெசிஸ், முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் செய்துவிட்டால் எது வேண்டுமானாலும் சாத்தியம். எனவே முதல் இரண்டு நாட்களில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியாக வேண்டும். ஆடுகளம் வறண்டு காணப்படுகிறது. எனவே முதல் இன்னிங்ஸில் அடிக்கும் ஸ்கோர் தான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்று டுப்ளெசிஸ் தெரிவித்தார். 

முதலில் பேட்டிங் ஆடவேண்டும் என்றால், டாஸ் ஜெயிக்க வேண்டும். ஆனால் டுப்ளெசிஸ் டாஸ் ஜெயிப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. எனவே அதற்கும் ஒரு ஐடியா வைத்துள்ளார். தன் விதியை கண்டு நொந்துகொள்ளும் டுப்ளெசிஸ், வேறு யாராவது ஒரு வீரரை டாஸ் போட அனுப்பிவைக்கக்கூட தயாராகவே உள்ளார். 
 

click me!