வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் அரைசதம் அடித்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் தென் ஆப்பிரிக்கா அணியில் தப்ரைஸ் ஷம்ஸி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மார்கோ ஜான்சென், எய்டன் மார்க்ரம், கேசவ் மகாராஜ் மற்றும் கஜிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
undefined
பின்னர் எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதையடுத்து மழை குறுக்கீடு ஏற்படவே 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. மேலும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு 123 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், கேப்டன் எய்டன் மார்க்ரம் 18, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29, ஹென்ரிச் கிளாசென் 22, டேவிட் மில்லர் 4 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் மார்கோ ஜான்சென் 21 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக தென் ஆப்பிரிக்கா விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து 2ஆவது அணியாக அரையிறுதி வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.