India vs South Africa: கடைசி டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Jan 14, 2022, 5:37 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் கேப்டன் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் அடித்தார். புஜாரா 43 ரன்கள் அடித்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் கீகன் பீட்டர்சன் அருமையாக பேட்டிங் ஆடி 72 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாரும் பெரிதாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 210 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் ஜஸ்ப்ரித் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டுமே சிறப்பாக ஆடினார். அபாரமாக பேட்டிங்  ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்தார். அவருக்கு மறுமுனையில் இருந்து ஒத்துழைப்பு கொஞ்சம் கூட கிடைக்கவில்லை. மற்ற வீரர்கள் அனைவரும் மறுமுனையில் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால், ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காதபோதிலும், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் வெறும் 198 ரன்கள் மட்டுமே அடித்தது.

மொத்தமாக 211 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 212 ரன்கள் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. 212 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் 3ம் வரிசை வீரர் கீகன் பீட்டர்சன் அருமையாக பேட்டிங் ஆடி 82 ரன்கள் அடித்தார். தொடக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கர் 30 ரன்கள் அடித்தார். 3 விக்கெட்டுக்கு பிறகு 4வது விக்கெட்டுக்கு வாண்டர் டசனும் டெம்பா பவுமாவும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடி, வெற்றி இலக்கை எட்டினர்.

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டுமொருமுறை தவறவிட்டது இந்திய அணி.
 

click me!