India vs South Africa:டீன் எல்கர் செம பேட்டிங்;2வது டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

Published : Jan 06, 2022, 09:36 PM IST
India vs South Africa:டீன் எல்கர் செம பேட்டிங்;2வது டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

சுருக்கம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்க அணி.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்தது.

கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ராகுல் அரைசதம் அடித்தார். ஆனால் அதை  பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 50 ரன்னில் ராகுல் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வால், புஜாரா (3), ரஹானே (3) ஆகிய வீரர்கள் ஏமாற்றமளித்தனர். பின்வரிசையில் அஷ்வின் சிறப்பாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடிக்க, இந்திய அணி முதல்  இன்னிங்ஸில் 202 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் அடித்தது. அந்த அணியில் கீகன் பீட்டர்சன் (62) மற்றும் டெம்பா பவுமா (51) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். கேப்டனும் தொடக்க வீரருமான எல்கர் 28 ரன்கள் அடித்தார். வேறு யாரும் சரியாக ஆடவில்லை. ஷர்துல் தாகூர் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மற்றும் தென்னாப்பிரிக்காவில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

27 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் (8) மற்றும் மயன்க் அகர்வால் (23) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் தொடக்கத்திலேயே ஆட்டமிழக்க, அதன்பின்னர் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். இந்திய டெஸ்ட் அணியில் தங்களது இடத்தை தக்கவைக்க கண்டிப்பாக நன்றாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த புஜாராவும் ரஹானேவும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். ரஹானே 58 ரன்னுக்கும், புஜாரா 53 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர்  விஹாரி மட்டும் ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தொடர்ந்து ஆட்டமிழக்க, 266 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. விஹாரி 40 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து 240 ரன்கள் என்ற இலக்கை 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் விரட்ட தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான எல்கர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மார்க்ரம் (31) மற்றும் பீட்டர்சன் (28) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். ஆனால் அவர்களும் எல்கருடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து முக்கியமான பங்களிப்புகளை அளித்துவிட்டுத்தான் சென்றனர். 3ம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்திருந்தது.

4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் 2 செசன்கள் மழையால் பாதிக்கப்பட்டது. 3வது செசனில் பேட்டிங்கை தொடர்ந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் எல்கரும் வாண்டெர் டசனும் சிறப்பாக பேட்டிங் ஆடினர். அந்த ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்கு ஷமி அந்த பிரேக்கை கொடுத்தார். டசன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றவர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போட்டு நிலைத்து ஆடிய எல்கர் கடைசி வரை களத்தில் நின்று தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடி, 96 ரன்களை குவித்து தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெறச்செய்தார்.

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 1-1 என டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!