India vs South Africa: 3வது டெஸ்ட்டில் அவரு ஆடியே தீரணும்..! போராடும் வீரருக்கு கம்பீர் ஆதரவு

By karthikeyan VFirst Published Jan 6, 2022, 8:50 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணியில் ஹனுமா விஹாரி ஆடியாக வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் வீரராக 2018ல் அறிமுகமான ஹனுமா விஹாரி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என வெளிநாடுகளில் அருமையாக பேட்டிங் ஆடியிருக்கிறார். ஆனாலும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைப்பதில்லை. 

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரி சேர்க்கப்படாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக சொதப்பினாலும், அவர்களுக்கு தொடர் வாய்ப்பளிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் விராட் கோலி ஆடாததால் தான் ஹனுமா விஹாரி ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்றார். ஆனால் அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டார். கேப்டவுனில் நடக்கும் அடுத்த டெஸ்ட்டில் கோலி வந்துவிட்டால் யார் நீக்கப்படுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. தங்களது இடத்தை அணியில் தக்கவைக்க கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ஆடிய புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ஆனால் அரைசதத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை.

ஹனுமா விஹாரிக்கும் ரஹானேவுக்கும் இடையே தான் அதிகமான போட்டி. ஏனெனில் புஜாரா 3ம் வரிசை வீரர். ரஹானே 5ம் வரிசை வீரர். ஹனுமா விஹாரியும் அதே பேட்டிங் ஆர்டரில் ஆடக்கூடியவர் தான். ரஹானே அரைசதம் அடித்தார். விஹாரியும் சிறப்பாக ஆடி 40 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனவே ரஹானேவிற்கு விஹாரி கடும் போட்டியாளராக திகழ்கிறார். அதுமட்டுமல்லாது வெளிநாடுகளில் ஆட கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி அருமையாக ஆடியிருக்கிறார் விஹாரி.

எனவே கேப்டவுனில் நடக்கும் 3வது டெஸ்ட்டில் விஹாரியை கண்டிப்பாக இந்திய அணியில் ஆடவைக்க வேண்டும் என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், ரஹானே கடந்த சில ஆண்டுகளாக எப்படி ஆடுகிறார் என்று பார்த்துவருகிறோம். அவர் அரைசதம் அடித்தார் என்றால், மறுபுறம் விஹாரியும் 40 ரன்கள் அடித்திருக்கிறார். கேப்டவுன் டெஸ்ட்டில் கோலி வந்துவிட்டால் அவர் 4ம் வரிசையில் ஆடுவார். 5ம் வரிசைக்கு ரஹானே மற்றும் விஹாரிக்கு இடையே போட்டி. விஹாரியைத்தான் கேப்டவுன் டெஸ்ட்டில் ஆடவைக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.
 

click me!