டி காக் டக் அவுட்.. ஆனாலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி.. ஆட்டநாயகர்கள் 2 பேர்

By karthikeyan VFirst Published Mar 5, 2020, 10:22 AM IST
Highlights

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. 
 

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டி20 தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 271 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், தொடக்கம் முதலே அடித்து ஆடி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 

23 பந்தில் 35 ரன்களுக்கு லுங்கி இங்கிடியின் பவுலிங்கில் வார்னர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்மித் மற்றும் லபுஷேன் ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் இங்கிடி. ஸ்மித்தை 13 ரன்களில் வீழ்த்திய இங்கிடி, அடுத்த பந்தில் லபுஷேனை டக் அவுட்டாக்கி அனுப்பினார். ஆஸ்திரேலிய அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் கேப்டன் ஃபின்ச்சும் ஷார்ட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்சை 69 ரன்களுக்கு நோர்ட்ஜே வீழ்த்தினார். இதையடுத்து ஷார்ட்டுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஃபின்ச் அவுட்டாகும்போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 158 ரன்கள். அதன்பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷார்ட்டும் மிட்செல் மார்ஷும் இணைந்து 66 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஷார்ட்டை 69 ரன்களில் ஷாம்ஸி வீழ்த்தினார். 

இதையடுத்து மிட்செல் மார்ஷை 36 ரன்களில் ஃபெலுக்வாயோ வெளியேற்ற, அலெக்ஸ் கேரி, அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் ஆகியோரை இங்கிடி வீழ்த்தினார். ஆனாலும் 50 ஓவர்களையும் முழுமையாக ஆடிய ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஸ்டார்க் அவுட்டானதால் ஆல் அவுட்டானது. 50 ஓவரில் 271 ரன்களை குவித்தது ஆஸி., அணி. தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் ஃபாஸ்ட் பவுலர் இங்கிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆறுமே முக்கியமான விக்கெட்டுகள். வார்னர், ஸ்மித், லபுஷேன், அலெக்ஸ் கேரி, அஷ்டன் அகர், கம்மின்ஸ் ஆகிய 6  முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் இங்கிடி. 

272 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான குயிண்டன் டி காக், முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே டக் அவுட்டானார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான மாலனுடன் ஸ்மட்ஸ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். மாலன் அரைசதம் கடக்க, நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மட்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்ததாக வெரெய்ன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் மாலன் நங்கூரமிட்டு மிகத்தெளிவாக ஆடினார். வெரெய்ன் விக்கெட்டுக்கு பிறகு மாலனுடன் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசன், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். கடந்த போட்டியில் சதமடித்து தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த கிளாசன், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதத்திற்கு பின்னர் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறினார். கிளாசன் 51 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, மாலனுடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் எந்தவித பதற்றமும் இல்லாமல் அருமையாக ஆடிய மாலன் சதமடித்தார். அவருடன் இணைந்த மில்லரும் சிறப்பாக ஆட, மாலன் சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடி, கடைசி வரை களத்தில் நின்று தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 49வது இலக்கை எட்டிய தென்னாப்பிரிக்க அனி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. 

Also Read - இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் அறிவிப்பு.. தாதாவின் கேப்டன்சியில் அசத்திய வீரர் தேர்வு

6 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிடி, முதல் சதமடித்த மாலன் ஆகிய இருவருமே ஆட்டநாயகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர்கள் என்பதால், இருவருக்கும் ஆட்டநாயகர்கள் விருது வழங்கப்பட்டது தகும். 
 

click me!