பார்த்திவ் படேல் - காந்தியின் கடும் போராட்டம் வீண்.. குஜராத்தை வீழ்த்தி ஃபைனலில் நுழைந்தது சவுராஷ்டிரா

By karthikeyan VFirst Published Mar 4, 2020, 4:52 PM IST
Highlights

ரஞ்சி தொடரின் அரையிறுதியில் பார்த்திவ் படேல் - சிராக் காந்தியின் கடும் போராட்டத்தை முறியடித்து குஜராத்தை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 

முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, பெங்கால், குஜராத் மற்றும் சவுராஷ்டிரா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. 

பெங்கால் மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இந்த போட்டியில் கர்நாடக அணியை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்கால் அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

அந்த அரையிறுதி போட்டி நான்கே நாட்களில் முடிந்த நிலையில், குஜராத் - சவுராஷ்டிரா இடையேயான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ராஜ்கோட்டில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சவுராஷ்டிரா அணி ஷெல்டான் ஜாக்சனின் சதத்தால் முதல் இன்னிங்ஸில் 304 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணி, 252 ரன்கள் அடித்தது. 52 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய சவுராஷ்டிரா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்கள் அடித்து, 326 ரன்கள் முன்னிலை பெற்று 327 ரன்கள் என்ற இலக்கை குஜராத் அணிக்கு நிர்ணயித்தது. 

327 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய குஜராத் அணி, வெறும் 63 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் கேப்டன் பார்த்திவ் படேலும் சிராக் ஜே காந்தியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி, இலக்கை விரட்டினர். வெற்றி முனைப்பில் இலக்கை விரட்டிய இந்த ஜோடியை சவுராஷ்டிரா பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. 

இருவருமே அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடினர். குஜராத் அணி வெற்றியை நோக்கி வீருநடை போட்டிக்கொண்டிருந்த நிலையில், 93 ரன்களில் பார்த்திவ் படேலை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் சவுராஷ்டிரா கேப்டன் ஜெய்தேவ் உனாத்கத். பார்த்திவ் படேலும் காந்தியும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 158 ரன்களை குவித்தனர். பார்த்திவ் படேலை வீழ்த்திய உனாத்கத், அடுத்த பந்திலேயே அக்ஸர் படேலை டக் அவுட்டாக்கி அனுப்பினார். அதன்பின்னர் ரூஷ் கலேரியாவும் ஆட்டமிழக்க, சிராக் காந்தியின் மீதான அழுத்தம் அதிகரித்தது. இதையடுத்து காந்தியும் 96 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். காந்தியை வீழ்த்திய உனாத்கத், கடைசி விக்கெட்டையும் வீழ்த்த, இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சவுராஷ்டிரா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

சவுராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி வரும் 9ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 
 

click me!