கிரிக்கெட் விதிமுறைகளை தீர்மானிக்கும் ஐசிசி-யின் முக்கிய பதவியில் சௌரவ் கங்குலி..!

By karthikeyan VFirst Published Nov 17, 2021, 3:03 PM IST
Highlights

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இருந்துவந்த அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அந்த பதவியில் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

சௌரவ் கங்குலி நிர்வாகத்திறனும் தலைமைத்துவ பண்புகளும் கொண்டவர் என்பது அவர் கிரிக்கெட் ஆடிய காலத்திலேயே அனைவருக்கும் தெரியும். அதனால் தான், சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாயிருந்த இந்திய அணியை இளம் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட கலவையான மற்றும் வலுவான அணியாக கட்டமைத்து, ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆடி இந்திய கிரிக்கெட்டை தலைநிமிரவைத்தவர்.

சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், தோனி வரை பல்வேறு தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளித்து, அவர்களது வளர்ச்சிக்கு வித்திட்டவர் கங்குலி. 

சௌரவ் கங்குலியின் நிர்வாகத்திறன் மற்றும் தலைமைத்துவ பண்புகள், அவரது அனுபவம் ஆகியவை இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்பதால் பிசிசிஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பிசிசிஐயின் தலைவராக இருந்து இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக திறம்பட செயல்பட்டுவருகிறார் சௌரவ் கங்குலி. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டையும், டிராவிட் வகித்துவந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியில் விவிஎஸ் லக்‌ஷ்மணையும் என முக்கியமான பொறுப்புகளில் தரமான நபர்களை நியமித்து இந்திய கிரிக்கெட்டுக்கு வளர்ச்சியை நோக்கிய பாதையை அமைத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளை தீர்மானிக்கும், ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் சௌரவ் கங்குலி. 2012ம் ஆண்டிலிருந்து 9 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்துவந்த அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அந்த பதவியில் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டின் முக்கியமான முடிவுகளை தீர்மானிக்கும் இந்த பதவியில், சௌரவ் கங்குலியின் அனுபவம் முக்கியமான முடிவுகளை எடுக்க உதவிகரமாக இருக்கும்.

டிஆர்எஸ், விதிமுறையை மீறிய பந்துவீச்சு உட்பட பல முக்கியமான முடிவுகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே முன்னேற்றத்தை ஏற்படுத்தினார் என்று கும்ப்ளேவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் ஐசிசி தலைவர் க்ரேக் பார்க்ளே.
 

click me!