#IPL2021 ஐபிஎல் திட்டமிட்டபடி நடந்தே தீரும்.. தாதா தடாலடி

By karthikeyan VFirst Published Apr 27, 2021, 3:18 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசன் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனை பாதுகாப்பான முறையில் நடத்திவருகிறது பிசிசிஐ.

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க முடியாமலும், இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டாலும் படலாம் என்ற பயத்திலும், ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா ஆகிய ஆஸி., வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகி ஆஸி.,க்கு திரும்பினர். 

தமிழகத்தை சேர்ந்த டெல்லி கேபிடள்ஸ் வீரர் அஷ்வினும், கொரோனா நேரத்தில் தனது குடும்பத்துடன் இருக்க விரும்புவதாக கூறி ஐபிஎல்லில் இருந்து பாதியில் விலகிவிட்டார்.

ஆஸி., கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் இருக்கும் ஆஸி., வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தொடர்ந்து பிசிசிஐயுடனும் தங்கள் நாட்டு வீரர்களுடனும் தொடர்பில் உள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதுடன், வீரர்கள் பயோ பபுளில் பாதுகாப்புடன் உள்ளனர். வீரர்கள், பயிற்சியாளர்கள், ஐபிஎல் நிர்வாகிகளின் பாதுகாப்பில் பிசிசிஐயும் ஐபிஎல் நிர்வாகமும் அதிக கவனம் செலுத்திவருகிறது. 

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலில் மக்களுக்கு சில மணி நேரம் மகிழ்ச்சியை வழங்கும் ஐபிஎல் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று கங்குலி தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
 

click me!