தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா வந்த தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியானது, 3 ஒருநாள் போட்டிகள், ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூருவில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹ்ரமன்ப்ரீத் கவுர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. ஷஃபாலி வர்மா 7 ரன்னிலும், தயாளன் ஹேமலதா 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 10, ஜெமீமா ரோட்ரிக்ஸ், 17, ரிச்சா கோஷ் 3 என்று வரிசையாக ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஒவ்வொருவரும் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழக்கவே ஸ்மிருதி மந்தனா மட்டும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். கடைசியாக 127 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 117 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக தீப்தி சர்மா 37 ரன்னும், பூஜா வஸ்த்ரேகர் 31 ரன்னும் எடுக்கவே இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது.
பின்னர், கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியில் சூன் லூஸ் 33 ரன்னும், மரிசன்னே கப் 24 ரன்னும் எடுக்கவே மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியானது 37.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்து 143 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் தீப்தி சர்மா 2 விக்கெட்டும், ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும் கைப்பற்றினர். ரேணுகா தாக்கூர் சிங், பூஜா வஸ்த்ரேகர் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி வரும் 19ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் 117 ரன்கள் எடுத்ததன் மூலமாக தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 7000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் 10,868 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். இவரைத் தொடர்ந்து 2ஆவது இந்திய வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா 7000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.