ஸ்மித் அபார இரட்டை சதம்.. மிட்செல் ஸ்டார்க் அதிரடி அரைசதம்.. இங்கிலாந்தை தெறிக்கவிட்ட ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Sep 6, 2019, 10:00 AM IST
Highlights

ஸ்மித்தை வீழ்த்தும் ஆயுதமாக இங்கிலாந்து அணியால் பார்க்கப்பட்ட ஆர்ச்சரால் ஸ்மித்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆர்ச்சர், ஸ்டூவர்ட் ப்ராட், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டன் ஆகியோர் ஸ்மித்தை வீழ்த்த கடுமையாக போராடினர். ஆனால் ஸ்மித்தின் பேட்டிங்கிற்கு முன் எதுவுமே எடுபடவில்லை. 

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. கடந்த 4ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. தொடக்க விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். 

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த லபுஷேன் 67 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித்தும் அரைசதம் அடித்து களத்தில் இருந்த நிலையில், அவருடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். ஸ்மித்தும் ஹெட்டும் களத்தில் இருந்தநிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாளின் பாதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் அடித்திருந்தது ஆஸ்திரேலிய அணி. 

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஹெட் ஆட்டமிழந்துவிட்டார். அதன்பின்னர் களத்திற்கு வந்த மேத்யூ வேடும் சோபிக்கவில்லை. வேட் 16 ரன்களில் நடையை கட்ட, அதன்பின்னர் ஸ்மித்துடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடிய ஸ்மித், இந்த இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். அல்டிமேட் ஃபார்மில் இருக்கும் ஸ்மித்தை இங்கிலாந்து பவுலர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. 

ஸ்மித்தை வீழ்த்தும் ஆயுதமாக இங்கிலாந்து அணியால் பார்க்கப்பட்ட ஆர்ச்சரும் பலனளிக்கவில்லை. ஆர்ச்சர், ப்ராட், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டன் ஆகியோர் ஸ்மித்தை வீழ்த்த கடுமையாக போராடினர். ஆனால் ஸ்மித்தின் பேட்டிங்கிற்கு முன் எதுவுமே எடுபடவில்லை. அரைசதம் அடித்த டிம் பெய்ன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித்தும் பெய்னும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 145 ரன்களை சேர்த்தனர். 

அபாரமாக ஆடிய ஸ்மித், தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஒவ்வொரு போட்டியிலும் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக திகழும் ஸ்மித், இந்த போட்டியிலும் மிகச்சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்தார். ஸ்மித்தை வீழ்த்துவதில் குறியாக இருந்த ஆர்ச்சர், அனுபவ பவுலர் ப்ராட் ஆகியோரிடம் விழுகாத ஸ்மித், யாருமே எதிர்பாராத விதமாக ஜோ ரூட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். 

ஸ்மித் 211 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அதிரடியாக ஆடிய ஸ்டார்க், அரைசதம் விளாசினார். ஸ்டார்க் 54 ரன்கள் அடித்தார். 58 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களை விளாசினார் ஸ்டார்க். ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இருந்த இங்கிலாந்து அணியிடமிருந்து அந்த மகிழ்ச்சியை, தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் பிடுங்கினார் ஸ்டார்க்.  நாதன் லயனும் அதிரடியாக ஆடி 26 ரன்களை அடித்தார். ஸ்டார்க்கும் லயனும் களத்தில் இருந்த போது, 8 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டென்லியும் பர்ன்ஸும் இறங்கினர். இம்முறை ராய் தொடக்க வீரராக இறக்கப்படவில்லை. டென்லி 4 ரன்களில் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழக்க, நைட் வாட்ச்மேனாக ஓவர்டன் இறக்கப்பட்டார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் அடித்துள்ளது. 
 

click me!