நல்ல வீரரை அசிங்கப்படுத்துறீங்க.. போனது போகட்டும்.. இனியாவது அவர தூக்கிப்போட்டு இவர இறக்குங்க!! தாதா அதிரடி

By karthikeyan VFirst Published Sep 5, 2019, 5:12 PM IST
Highlights

மயன்க் அகர்வால் நல்ல பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவரது பார்ட்னர் கேஎல் ராகுல் சரியில்லை - கங்குலி.

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறார். நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர் என்று பல முன்னாள் ஜாம்பவான்களாலும் ராகுல் புகழப்படுவது கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் அவரால் அணிக்கு எந்தவித பயனும் இல்லை என்று நினைக்கும் அளவிற்குத்தான் அவரது ஆட்டம் இருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலுமே அவருக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் இரண்டையுமே அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் இன்னிங்ஸில் 44 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 63 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 6 ரன்கள் மட்டுமே வெளியேறினார். இதைவிட ஒரு மோசமான இன்னிங்ஸை ஆடவே முடியாது எனுமளவிற்கு படுமோசமாக ஆடிவிட்டுச் சென்றார். 

ராகுல் மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் நடந்துகொள்ளவேயில்லை. அவர் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவரும் நிலையிலும், அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. கேப்டன் கோலிக்கு நெருக்கமானவர் என்பதால்தான் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக சொதப்பும் மற்ற வீரர்களுக்கு இதுபோன்ற தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. 

ராகுலை விட ரோஹித் சர்மா ஒன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக ஆடிவிடவில்லை. ஆனாலும் டீம் காம்பினேஷன் என்ற காரணத்தை சொல்லி ரோஹித் ஓரங்கட்டப்படுகிறார். அதேவேளையில் சரியாக ஆடாத ராகுலுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக கருதுவதால் தான், ரஹானே, விஹாரி ஆகியோர் அணியில் இருப்பதால் ரோஹித்துக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 

ஆனால் ரோஹித்தை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறக்கலாம் என ஏற்கனவே முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதே கருத்தை மீண்டும் தெரிவித்துள்ளார். டெஸ்ட் அணியில் அவ்வப்போது எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்த ரோஹித் சர்மா, உலக கோப்பையில் அபாரமாக ஆடி நல்ல ஃபார்மில் இருப்பதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 

அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி ஆடவுள்ள நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கட்டுரை எழுதியுள்ள கங்குலி, இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஜோடி சிறப்பானதாக இல்லை. நிரந்தரமான மற்றும் சிறப்பானதொரு தொடக்க ஜோடியை உருவாக்க வேண்டும். மயன்க் அகர்வால் நல்ல பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவரது பார்ட்னர் கேஎல் ராகுல் சரியாக ஆடவில்லை. ரோஹித்தை டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக இறக்கலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதையே தான் சொல்கிறேன்.. ரோஹித்துக்கு டெஸ்ட் அணியில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். திறமையான வீரரை பென்ச்சில் உட்கார வைக்கக்கூடாது என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

ஹனுமா விஹாரியும் ரஹானேவும் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடிவருவதால், ரோஹித்தை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று கங்குலி வலியுறுத்தியிருக்கிறார். 
 

click me!