ஷுப்மன் கில் அதிரடி இரட்டை சதம்.. பிரியங்க் பன்சால், விஹாரி அபார சதம்.. நியூசிலாந்தை தெறிக்கவிட்ட நம்ம பசங்க

By karthikeyan VFirst Published Feb 2, 2020, 11:18 AM IST
Highlights

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். 
 

இந்தியா ஏ அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து ஏ அணியுடன் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என நியூசிலாந்து ஏ அணி வென்றது. இதையடுத்து டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணியில் ஷுப்மன் கில் மற்றும் கேப்டன் ஹனுமா விஹாரி ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். இவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து ஏ அணியின் தொடக்க வீரர் வில் யங் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். ராச்சின் ரவீந்திரா 47 ரன்கள் அடித்தார். அஜாஸ் படேல் 38 ரன்களும் க்ளென் ஃபிலிப்ஸ் 4 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மார்க் சாப்மேனும் க்ளீவரும் இணைந்து இந்திய பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு ஆடி ஸ்கோர் செய்தனர். 

இருவருமே சதமடித்து அசத்தினர். ஆறாவது விக்கெட்டுக்கு 268 ரன்களை குவித்தனர். சாப்மேன்114 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் சதத்திற்கு பின்னரும் அபாரமாக ஆடிய க்ளீவர் இரட்டை சதத்தை நெருங்கினார். 196 ரன்கள் அடித்த அவரை இஷான் போரெல், இரட்டை சதமடிக்க விடாமல் வீழ்த்தினார். இதையடுத்து நியூசிலாந்து அணி 562 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

316 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் மற்றுமொரு முறை ஏமாற்றமளித்தார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் டக் அவுட்டானார். அபிமன்யூ ஈஸ்வரனும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனால் அதன்பின்னர் ப்ரியங்க் பன்சாலும் ஷுப்மன் கில்லும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடினர். சிறப்பாக ஆடிய இருவருமே சதமடித்தனர். பிரியங்க் பன்சால் 115 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கில்லுடன் கேப்டன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். சதத்திற்கு பின்னரும் கில் சிறப்பாக ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஹனுமா விஹாரியும் நன்றாக பேட்டிங் ஆடினார். அபாரமாக ஆடிய கில், இரட்டை சதமடித்து அசத்தினார். கில் இரட்டை சதமடித்ததை தொடர்ந்து ஹனுமா விஹாரியும் சதமடித்தார். ஆட்டத்தின் கடைசி நாளான நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்களை குவித்திருந்தது. கில் 204 ரன்களுடனும் விஹாரி 100 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து போட்டி டிரா ஆனது. 

முதல் இன்னிங்ஸில் சரியாக பேட்டிங் ஆடாத இந்தியா ஏ அணி, இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலாக ஆடி, நியூசிலாந்துக்கு தங்களது உண்மையான திறமையை நிரூபித்தது. 

click me!