நீயெல்லாம் ஒரு கேப்டனா? தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது..? தெறிக்கவிட்ட அக்தர்

By karthikeyan VFirst Published Jun 1, 2019, 10:00 AM IST
Highlights

பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே பாகிஸ்தான் அணி சொதப்பியது. போட்டி முழுவதுமே வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதிக்கம் செலுத்தி எளிதாக வெற்றியை பறித்தது.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முழுக்க முழுக்க ஒருசார்பான போட்டியாக அமைந்தது. ஆட்டத்தின் எந்த சூழலிலும் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தவேயில்லை. தொடர்ந்து இரண்டு ஒருநாள் தொடர்களில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, உலக கோப்பையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஒரு வெற்றி தேவைப்பட்டது. அந்தவகையில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே பாகிஸ்தான் அணி சொதப்பியது. போட்டி முழுவதுமே வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதிக்கம் செலுத்தி எளிதாக வெற்றியை பறித்தது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் யாருமே சோபிக்கவில்லை. ஃபகார் ஜமான் அதிரடியாக தொடங்கினார். அவரை தவிர்த்து பாபர் அசாமும் ஹஃபீஸும் மட்டுமே ஓரளவிற்கு போராடிப்பார்த்தனர். மற்ற அனைவருமே வெஸ்ட் இண்டீஸிடம் சரணடைந்தனர். 

வெறும் 105 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டாக, 106 ரன்கள் என்ற இலக்கை ஒரு இலக்காகவே மதிக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி, கெய்லின் அதிரடியால் 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஒஷேன் தாமஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ஏற்கனவே தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பாகிஸ்தான் அணியை இந்த படுதோல்வி கூடுதலாக பாதித்துள்ளது. பாகிஸ்தான் அணி வீரர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களுமே அதிருப்தியில்தான் உள்ளனர். இந்த தோல்வி முன்னாள் வீரர் ஷோயப் அக்தரை கடுமையாக பாதித்துள்ளது என்பதை அவரது பேச்சின் மூலமே அறிய முடிகிறது. 

வெஸ்ட் இண்டீஸிடம் அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். சர்ஃபராஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்தர், டாஸ் போடும்போது பார்க்கிறேன், சர்ஃபராஸ் அகமதின் வயிறு வெளியில் வந்து கிடக்கிறது. அவரது முகமும் குண்டாக இருக்கிறது. இதுவரை இப்படி ஒரு அன்ஃபிட்டான வீரர் கேப்டனாக இருந்து நான் பார்த்ததில்லை. அவரது அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியவில்லை. விக்கெட் கீப்பிங் செய்யும்போது திணறுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

சர்ஃபராஸ் அகமதுவை விமர்சித்தாலும், பின்னர் என்னதான் இருந்தாலும் அவர்கள் நமது நாட்டுக்காக ஆடுகிறார்கள். எனவே அவர்களுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும் என்றும் அக்தர் தெரிவித்துள்ளார். 
 

click me!