பாகிஸ்தான் அணி படுமோசம்.. மளமளவென விக்கெட்டுகளை சரித்து செம கெத்து காட்டும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்

By karthikeyan VFirst Published May 31, 2019, 4:31 PM IST
Highlights

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஃபகார் ஜமானை 6வது ஓவரில் ரசல் வீழ்த்தினார். 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 22 ரன்களை அடித்த ஃபகார் ஜமான், ஆண்ட்ரே ரசலின் எக்ஸ்ட்ரா பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் அவுட்டானார். 
 

உலக கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்த தொடரில் கூட பேட்டிங் நன்றாக ஆடியிருந்தாலும், அந்த அணி கடைசி 11 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. 

எனவே தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு ஒரு வெற்றி கண்டிப்பாக அவசியம் என்ற நிலையில், ஃபகார் ஜமானும் இமாம் உல் ஹக்கும் களத்திற்கு வந்தனர். ஃபகார் ஜமான் அதிரடியாக தொடங்க, தொடக்கம் முதலே திணறிய இமாம் உல் ஹக், 11 பந்துகளில் வெறும் 2 ரன் மட்டுமே அடித்து கோட்ரெலின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஃபகார் ஜமானுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஃபகார் ஜமானை 6வது ஓவரில் ரசல் வீழ்த்தினார். 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 22 ரன்களை அடித்த ஃபகார் ஜமான், ஆண்ட்ரே ரசலின் எக்ஸ்ட்ரா பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் அவுட்டானார். ஃபகார் ஜமான் அந்த பந்தை புல் ஷாட் அடிக்க நினைத்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிக உயரம் எழும்பியதால் ஹெல்மெட்டில் பட்டு அப்படியே ஸ்டம்பில் அடித்தது. 

இதையடுத்து களத்திற்கு வந்த ஹாரிஸ் சொஹைலையும் ரசலே வீழ்த்தினார். இதுவும் ஒரு அபாரமான பவுன்ஸர். சொஹைல் வெறும்  8 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவரில் வெறும் 45 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்ததை அடுத்து கேப்டன் சர்ஃபராஸ் அகமது, பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார். பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த இந்த ஜோடியும் அதை செய்ய தவறிவிட்டது. 

14வது ஓவரை தனது இரண்டாவது ஓவராக வீசிய ஒஷேன் தாமஸ், அந்த ஓவரில் பாபர் அசாமை 22 ரன்களில் வீழ்த்தினார். 62 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவும் அனுபவ வீரர் முகமது ஹஃபீஸும் சேர்ந்து அணியை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தனர். ஆனால் சர்ஃபராஸ் அகமதுவும் அவரை தொடர்ந்து இமாத் வாசிமும் ஹோல்டரின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஷதாப் கான் கோல்டன் டக் அவுட்டானார். இதையடுத்து வெறும் 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. எனவே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கப்போவது உறுதியாகிவிட்டது. 

 

 

click me!