முட்டாள்தனமா ஆடிய நியூசிலாந்து.. அவங்க ஆடுனதுக்கு பேரு கிரிக்கெட்டா..? நியூசிலாந்து அணியை கிழித்து தொங்கவிட்ட முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Feb 3, 2020, 11:42 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை அதன் சொந்த மண்ணில் 5-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது நியூசிலாந்துக்கு மரண அடி.
 

5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடந்தது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, முதன்முறையாக நியூசிலாந்தில் டி20 தொடரை வென்று அசத்தியது. 

இந்திய அணி முதல் 3 போட்டிகளையும் வென்று தொடரை வென்றதையடுத்து, கடைசி 2 போட்டிகளில் அணியில் சில மாற்றங்களை செய்து பரிசோதனைகளை செய்தது. 4வது போட்டியில் ரோஹித் ஆடவில்லை, கடைசி போட்டியில் விராட் கோலி ஆடவில்லை. இந்த 2 போட்டிகளிலுமே எளிய இலக்கை விரட்டி வெற்றி பெற முடியாமல் படுமோசமாக தோற்றது நியூசிலாந்து அணி. 

நான்காவது போட்டியில் வெறும் 166 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் தோற்றது. மூன்றாவது போட்டி டை ஆகி சூப்பர் ஓவர் வீசப்பட்ட நிலையில், நான்காவது போட்டியும் டை தான் ஆனது. கடைசி ஓவரில் வெறும் 7 ரன்களை அடிக்கமுடியாமல் அந்த ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை இழந்து, 6 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து அணி. எனவே அந்த போட்டி டை ஆனது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து நிர்ணயித்த 14 ரன்கள் என்ற இலக்கை ஐந்தே பந்தில் அடித்து வென்றது இந்திய அணி. 

அதேபோல நேற்று நடந்த கடைசி போட்டியிலும் நியூசிலாந்து அணி எளிதாக வென்றிருக்கலாம். ஆனால் வெறும் 164 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோற்றது. நேற்று நடந்த கடைசி போட்டியில் கோலி ஆடாததால் ரோஹித் தான் கேப்டன். ஆனால் ரோஹித்தும் முதல் இன்னிங்ஸின்போது ஏற்பட்ட காயத்தால் இரண்டாவது இன்னிங்ஸிற்கு களத்திற்கு வரவில்லை. எனவே கேஎல் ராகுல் தான் கேப்டன்சி செய்தார். 

பல நெருக்கடியான சூழல்களை, ஒரு கேப்டனாக ராகுல் சிறப்பாக கையாண்டார். ஒரே ஓவரில் 34 ரன்களை குவித்த நியூசிலாந்து அணியால் எஞ்சிய 19 ஓவரில் 130 ரன்களை அடித்து வெற்றி பெற முடியாமல் படுமோசமாக தோற்றது. கிட்டத்தட்ட பந்துக்கு நிகரான ரன்கள் தான் அந்த அணியின் வெற்றிகு தேவைப்பட்டது. ஆனால் அதைக்கூட அடிக்கமுடியாமல் தோற்றது நியூசிலாந்து. கடைசி 7 ஓவர்களில் நியூசிலாந்துக்கு வெறும் 48 ரன்கள் மட்டுமே தேவை. ஆனால் அதைக்கூட அடிக்காமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்றது. 

Also Read - சஞ்சு சாம்சனின் அருமையான ஃபீல்டிங்.. செம டைமிங்.. காத்துலயே வித்தை காட்டிய வீடியோ

நியூசிலாந்து அணி, எளிதாக அடிக்கக்கூடிய இலக்கை கூட அடிக்காமல் வெற்றிகளை கடைசி 2 போட்டிகளிலும் இந்திய அணிக்கு தாரைவார்த்தது. ஒவ்வொரு போட்டியிலும் ஓரளவிற்கு ஆடி களத்தில் நிலைத்துவிடும், சீனியர் வீரரான ரோஸ் டெய்லர், கடைசிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க தவறுகிறார். அவரைப்போன்ற சீனியர் வீரர்கள் களத்தில் நிலைத்துவிட்ட பட்சத்தில், இலக்கை எட்டும் வரை கடைசிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார் டெய்லர். 

நான்காவது போட்டியில் கடைசி ஓவரில் அவுட்டான டெய்லர், கடைசி போட்டியில் 18வது ஓவரில் அவுட்டாகிவிட்டார். இவர் அவுட்டானதற்கு பிறகு இரண்டு போட்டிகளுமே தலைகீழாக மாறின. சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான இந்த ஒயிட்வாஷ் என்ற அசிங்கம் நியூசிலாந்துக்கு கண்டிப்பாக தேவையான ஒன்றுதான். ஏனெனில் அந்த அணியின் ஆட்டம் படுமோசமாக இருந்தது. எளிய ஸ்கோரைக்கூட எட்டி வெற்றி பெற முடியாத அளவிற்கு, கடைசி நேரங்களில் அந்த அணியின் வீரர்கள் பதறிவிடுகின்றனர். அதனால் நெருக்கடிகளை கையாள திணறும் அவர்கள், பெரிய ஷாட்டுக்கு முயற்சித்து விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். பந்துக்கு நிகரான ரன் தேவைப்படும் ஒரு போட்டியில், பவுலிங் அணி வெல்வது என்பது மிகவும் அரிதான விஷயம். ஆனால் நியூசிலாந்து அணி, அதுபோன்ற பல வெற்றிகளை இந்திய அணி பெறுவதற்கு, இந்த தொடரில் காரணமாக இருந்துள்ளது.

நியூசிலாந்து அணியின் படுமோசமான ஆட்டத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ஷோயப் அக்தர், தனது யூடியூப் பக்கத்தில் நியூசிலாந்தை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அக்தர், மிகவும் முட்டாள்தனமான ஆட்டம். சிங்கிள் ஆடுவது எப்படி, பந்துக்கு நிகரான ரன்னை எடுப்பது எப்படி என்று நியூசிலாந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 5 போட்டிகளில் 2 போட்டிகளை டை ஆக்கியுள்ளனர். கடைசி போட்டியில் தோற்றேவிட்டனர். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழக்கலாமா? எந்த அணியாவது அப்படி இழக்குமா? கடைசி போட்டியிலும் அதேதான் நடந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. 

Also Read - அவ்வளவு பரபரப்புலயும் பதற்றமே படாமல் நிதானமா, சாமர்த்தியமா செயல்பட்ட சாம்சன்.. அருமையான ரன் அவுட்.. வீடியோ

ரோஸ் டெய்லர் போன்ற அணியின் சீனியர் வீரர்கள் கடைசி வரை நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க தவறுவது, எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. என்ன மாதிரியான கிரிக்கெட் அவர்கள் ஆடினார்கள் என்று எனக்கு புரியவேயில்லை. நியூசிலாந்து அணி முட்டாள்தனமாக ஆடி ஒயிட்வாஷ் ஆனது மனதையே நொறுக்கிவிட்டது. 3-2 என முடிந்திருக்க வேண்டிய தொடரில் ஒயிட்வாஷ் ஆனது நியூசிலாந்து அணி என்று விளாசியுள்ளார் அக்தர். 
 

click me!