அவ்வளவு பரபரப்புலயும் பதற்றமே படாமல் நிதானமா, சாமர்த்தியமா செயல்பட்ட சாம்சன்.. அருமையான ரன் அவுட்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 3, 2020, 10:50 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங்கில் அசத்திவிட்டார் சஞ்சு சாம்சன். பரபரப்பான நிலையிலும் பதற்றப்படாமல், விக்கெட் கீப்பரை அழைத்து ரன் அவுட் செய்த விதம் அனைவரையும் கவர்ந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
 

ரிஷப் பண்ட் சொதப்பிய போதெல்லாம் சஞ்சு சாம்சனை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களுக்கு வழிவகுத்தது. உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி, இந்திய அணியில் தனக்கான இடத்திற்காக காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்துவந்தது. இலங்கைக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிக்ஸர் அடித்துவிட்டு அதற்கடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார் சாம்சன். 

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளிலுமே சாம்சன் பேட்டிங் சரியாக ஆடவில்லை. 4வது போட்டியில் 8 ரன்களிலும் கடைசி போட்டியில் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார். 

ஆனால் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன், இரண்டு போட்டிகளிலுமே ஃபீல்டிங்கில் அசத்தினார். குறிப்பாக கடைசி டி20 போட்டியில் மிக அருமையாக ஃபீல்டிங் செய்தார். ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட் ஆகியவற்றை செய்த சாம்சன், ஒரு அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் சிக்ஸரை தடுத்து இந்திய அணிக்கு 4 ரன்களையும் காப்பாற்றி கொடுத்தார். 

நியூசிலாந்து அணி பேட்டிங்கின் 4வது ஓவரின் இரண்டாவது பந்தை ஆஃப் திசையில் அடித்துவிட்டு டிம் சேஃபெர்ட் ரன் ஓடினார். ஷார்ட் கவர் திசையில் ஃபீல்டிங் செய்த சஞ்சு சாம்சன் அந்த பந்தை பிடித்தார். டிம் சேஃபெர்ட் யோசிக்காமல் ரன் ஓட, மறுமுனையில் நின்ற டாம் ப்ரூஸ் ஆரம்பத்தில் வேண்டாமென்றார். ஆனால் சேஃபெர்ட் ஓடிவந்ததால் அவரும் ஓடினார். சாம்சனின் கையில் பந்து சிக்கிய சமயத்தில் தான் பவுலிங் முனையிலிருந்து ஓடவே தொடங்கினார் ப்ரூஸ். 

எனவே சரியாக ஸ்டம்பில் அடித்தால் அது எளிய ரன் அவுட். அதை அறிந்த சாம்சன், ஒருவேளை நேரடியாக பந்தை எறிந்து அது ஸ்டம்பில் படாவிட்டால் ரன் அவுட் வாய்ப்பு பறிபோகும் என்பதை உணர்ந்தார். அதனால் பந்தை தூக்கி எறியாமல், விக்கெட் கீப்பர் ராகுலை ஸ்டம்பை நோக்கி வரும்படி அழைத்தார். உடனடியாக ராகுல் ஸ்டம்பை நோக்கி ஓடிவர, அதன்பின்னர், விக்கெட் கீப்பர் பிடித்து ரன் அவுட் செய்ய ஏதுவாக, ஸ்டம்புக்கு அருகில் பந்தை த்ரோ செய்தார். அதை பிடித்து ராகுல் ரன் அவுட் செய்தார். பரபரப்பான சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் நிதானமாக சாமர்த்தியமாக செயல்பட்டார் சாம்சன். அந்த வீடியோ இதோ.. 

via Gfycat

இதையடுத்து இந்த போட்டியில் 164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 156 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. 
 

click me!