
சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி 100 சதங்களுடன் 34,357 ரன்களை குவித்து, பல்வேறு பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர்.
தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் கெரியரில் வாசிம் அக்ரம், ஆம்ப்ரூஸ், அக்தர், பிரெட் லீ உள்ளிட்ட பல மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர்கள் பலரை எதிர்கொண்டு சிறப்பாக ஆடியவர். சர்வதேச கிரிக்கெட்டில் சில பேட்ஸ்மேன் - பவுலர்க்கு இடையேயான மோதல் ரசிக்கத்தக்கதாக இருக்கும். அந்தவகையில், அப்படியான ஒரு மோதல் ஜோடி சச்சின் - அக்தர். அக்தரின் பவுலிங்கை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்வதை பார்க்க மிக சுவாரஸ்யமாக இருக்கும். சச்சின் - அக்தர் மோதலில் சில நேரங்களில் சச்சினும் சில நேரங்களில் அக்தரும் வென்றிருப்பர். ஆனால் இறுதியில் ஜெயித்தது என்னவோ கிரிக்கெட் தான்.
சச்சின் உலகத்தரம் வாய்ந்த லெஜண்ட் பேட்ஸ்மேன். அக்தரும் சளைத்தவர் அல்ல. அதிவேகமாக பந்துவீசி தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின், பாண்டிங், டிராவிட், லாரா, கில்கிறிஸ்ட், காலிஸ், ஹைடன் உள்ளிட்ட பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தனது வேகத்தால் மிரட்டி எடுத்தவர். அந்தவகையில், சச்சின் - அக்தர் இடையேயான போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இந்நிலையில், சச்சின் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் அக்தர். 2006ல் இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, சச்சின் டெண்டுல்கரின் தலையை குறிவைத்து வேண்டுமென்றே பந்துவீசியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், நான் இதை சொல்லியே ஆக வேண்டும். 2006ல் இந்தியா பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அதில் கராச்சி டெஸ்ட்டில் சச்சின் டெண்டுல்கரை காயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பந்துவீசினேன். இன்சமாம் என்னை ஸ்டம்புக்கு நேராக பந்துவீசச் சொன்னார். ஆனால் நான் வேண்டுமென்றே சச்சின் டெண்டுல்கரின் தலையை குறிவைத்து ஹெல்மெட்டுக்கே பந்துவீசினேன். சச்சின் டெண்டுல்கரின் சோலி முடிந்துவிட்டது என்றே நினைத்தேன். ஆனால் வீடியோவை பார்க்கும்போதுதான், அவர் அதை சமாளித்துவிட்டார் என்பது தெரிந்தது என்றார் அக்தர்.