இந்திய அணிக்கு பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது..! அகமதாபாத் பிட்ச் விவகாரத்தில் அக்தர் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 2, 2021, 4:13 PM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடந்த அகமதாபாத் ஆடுகளத்தை இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்த நிலையில், அதுகுறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ளார் ஷோயப் அக்தர்.
 

இந்தியா இங்கிலாந்து இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி, 2ம் நாளே முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி, 2ம் நாளே முடிந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

இந்திய அனியின் இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல், 11 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர்  அஷ்வின் 7விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி கேப்டனும் ஆஃப் ஸ்பின்னருமான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச்  4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் மொத்தம் 30 விக்கெட்டுகள் விழுந்தன. அதில் 28 விக்கெட்டுகள் ஸ்பின்னர்கள் வீழ்த்தியவை.

இதையடுத்து, மைக்கேல் வான், டேவிட் லாயிட் உள்ளிட்ட பல இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் அகமதாபாத் ஆடுகளத்தை விமர்சிக்க தொடங்கினர். ஆடுகளம் குறித்த விமர்சனங்களுக்கு கவாஸ்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், இதுமாதிரியான பிட்ச்களில் டெஸ்ட் கிரிக்கெட் நடக்குமா என்று கேட்டால், கண்டிப்பாக இல்லை. சம்மந்தமில்லாமல் பந்து திரும்பி, இரண்டே நாளில் டெஸ்ட் போட்டி முடிவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. சொந்த மண்ணில் சாதகமான ஆடுகளத்தை தயார் செய்வது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது ஓவராகிவிட்டது என்று கருதுகிறேன். இந்திய அணி 400 ரன்கள் அடித்து, இங்கிலாந்து 200 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிறது என்றால், இங்கிலாந்து சரியாக ஆடவில்லை எனலாம். ஆனால் இந்திய அணியும் 145 சுருண்டது.

இந்திய அணி மிகப்பெரிய மற்றும் சிறந்த அணி. எந்த மாதிரியான பிட்ச்சிலும் இங்கிலாந்தை வீழ்த்தக்கூடிய அளவிற்கு இந்திய அணி சிறந்த அணி. இந்திய அணிக்கு பயப்பட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. வேண்டுமென்றே அந்த மாதிரியான பிட்ச்சை தயார் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அடிலெய்டில் இந்தியாவுக்கு சாதகமாகவா பிட்ச் தயார் செய்யப்பட்டது? மெல்போர்ன் பிட்ச் இந்தியாவுக்கு சாதகமாகவா தயார் செய்யப்பட்டது? ஆனாலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. எந்த பிட்ச்சில் எந்த கண்டிஷனில் ஆடினாலும் நல்ல கிரிக்கெட் ஆட வேண்டும்; அவ்வளவுதான் என்று அக்தர் தெரிவித்தார்.
 

click me!