Akhtar on Sachin: இந்த ரூல்ஸ்லாம் அப்ப இருந்திருந்தால் சச்சின் ஒரு லட்சம் ரன் அடித்திருப்பார் - அக்தர்

By karthikeyan VFirst Published Jan 28, 2022, 3:44 PM IST
Highlights

இப்போதிருக்கும் 3 ரிவியூ ரூல்ஸ் எல்லாம் சச்சின் டெண்டுல்கர் காலத்தில் இருந்திருந்தால், அவர் ஒரு லட்சம் ரன் அடித்திருப்பார் என்று ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
 

கிரிக்கெட் விதிகள் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்துவருகிறது என்ற கொதிப்பும் ஆதங்கமும் எப்போதுமே ஃபாஸ்ட் பவுலர்களுக்கு உண்டு. அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக மாறிவிட்டது.

குறிப்பிட்ட சில ஓவர்களில் ஃபீல்டிங் கட்டுப்பாடுகள், ரிவியூ ஆப்சன்கள், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள் ஆகிய விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக எப்போதுமே விமர்சித்துவந்திருக்கிறார் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடனான தனது யூடியூப் சேனல் உரையாடலின்போதும் இதுகுறித்து பேசினார் அக்தர்.

அப்போது பேசிய ஷோயப் அக்தர், இப்போதெல்லாம் 2 புதிய பந்துகள் கொடுக்கப்படுகின்றன. விதிகளை கடுமையாக்க வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகவே விதிகள் வகுக்கப்படுகின்றன. சச்சின் டெண்டுல்கர் ஆடிய காலக்கட்டத்தில் 3 ரிவியூ கொடுக்கப்பட்டிருந்தால், சச்சின் ஒரு லட்சம் ரன் அடித்திருப்பார். 

இந்த விஷயத்தில் தான் சச்சினை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கும். சச்சின் டெண்டுல்கர், அவரது கெரியரில், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸை எதிர்கொண்டிருக்கிறார்; ஷேன் வார்னுக்கு எதிராக ஆடியிருக்கிறார். பின்னர் பிரெட் லீ, அக்தரை எதிர்கொண்டிருக்கிறார். அதன்பின்னர் அடுத்த தலைமுறை ஃபாஸ்ட் பவுலர்களையும் எதிர்கொண்டு ஆடியிருக்கிறார். எனவே தான் சச்சின் டெண்டுல்கரை மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்று கூறுவதாக அக்தர் தெரிவித்தார்.

ஆம்.. அக்தர் சொல்வது உண்மை தான். எத்தனையோ முறை 80-90 ரன்களில் களத்தில் இருந்தபோது, அம்பயர்களின் தவறான முடிவுகளால் எதுவுமே செய்யமுடியாமல் களத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் சச்சின். அவருக்கே அது அவுட்டில்லை என்பது கண்டிப்பாக தெரிந்தும் கூட, நிராயுதபாணியாக நடையை கட்டியிருக்கிறார். அப்படியிருந்தும், 100 சதங்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 34357 ரன்களை குவித்துள்ளார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!