அவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..! ஷிகர் தவான் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 24, 2021, 10:16 PM IST
Highlights

பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரையும் உடனடியாக இங்கிலாந்துக்கு அனுப்பச்சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை என்று இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை இங்கிலாந்தில் ஆடிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கேயே தங்கியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் அதேவேளையில், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் மூவர் அடுத்தடுத்து காயத்தால் வெளியேறினர். இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து முதலில் விலகினார். அவரைத்தொடர்ந்து ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்டாண்ட்பை ஃபாஸ்ட் பவுலராக எடுக்கப்பட்டிருந்த ஆவேஷ் கான் ஆகிய இருவரும் காயத்தால் விலகினர்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளதால், 3 வீரர்கள் காயத்தால் வெளியேறியது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். எனவே காயத்தால் வெளியேறிய 3 வீரர்களுக்கு மாற்று வீரர்களாக மூவர் இங்கிலாந்துக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இலங்கை தொடரில் ஆடிக்கொண்டிருக்கும் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் இருவர் மற்றும் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஆகிய மூவரும் இங்கிலாந்துக்கு அனுப்பப்படவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து பேசியுள்ள இலங்கை தொடருக்கான இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவை உடனடியாக இங்கிலாந்துக்கு அனுப்பச்சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை. எனவே  டி20 தொடருக்கான உத்திகளையும் திட்டங்களையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்திருக்கிறார்.
 

click me!