ஷர்துல் தாகூர் வெறித்தனமான பேட்டிங்.. பெரிய ஸ்கோர் அடித்த மும்பை அணி

By karthikeyan VFirst Published Mar 1, 2021, 2:25 PM IST
Highlights

இமாச்சல பிரதேசத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் ஷர்துல் தாகூரின் அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவரில் 321 ரன்களை குவித்தது மும்பை அணி.
 

விஜய் ஹசாரே தொடரில் சில வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி அசத்திவருகின்றனர். மும்பை மற்றும் இமாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, சூர்யகுமார் யாதவ், ஆதித்ய தரே மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 321 ரன்களை குவித்தது.

மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, ஜெய்ஸ்வால் மற்றும் 3ம் வரிசை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் தலா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சர்ஃபராஸ் கானும் 11 ரன்னில் ஆட்டமிழக்க, 49 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது மும்பை அணி.

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆதித்ய தரே ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், 75 பந்தில் 91 ரன் அடித்து சூர்யகுமார் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தரேவும் ஷர்துல் தாகூரும் சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

ஆதித்ய தரே 88 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 57 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்தார். ஷர்துல் தாகூரின் பேட்டிங் இப்போது நன்றாக மேம்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில், வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து ஷர்துல் தாகூர் ஆடிய அருமையான இன்னிங்ஸ் தான் இந்திய அணியை காப்பாற்றியது. அதே தன்னம்பிக்கையுடன் விஜய் ஹசாரேவில் ஆடிவரும் ஷர்துல் தாகூர், இந்த போட்டியில் வெறும் 57 பந்த்ல் 92 ரன்களை குவித்து மிரட்டினார்.

அவரது அதிரடியால் தான் மும்பை அணி 50 ஓவரில் 321 ரன்களை குவித்தது. இதையடுத்து 322 ரன்கள் என்ற கடின இலக்கை இமாச்சல பிரதேச அணி விரட்டிவருகிறது.

click me!