
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஆஷஸ் தொடர் என்பது உலக கோப்பையை போல முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் இரு அணிகளும் வெறித்தனமாக விளையாடும்.
ஆனால் இந்த ஆஷஸ் தொடரை பார்க்கையில், இங்கிலாந்து அணி அப்படி வெற்றி வேட்கையுடன் விளையாடுவதாக தெரியவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி, 2 டெஸ்ட்டிலுமே படுதோல்வி அடைந்திருக்கிறது.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது. 2 டெஸ்ட்டிலுமே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து விதத்திலும் இங்கிலாந்தின் ஆட்டம் மோசமாக இருந்தது.
அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய 2 முக்கியமான பவுலர்கள் ஆடவில்லை. அப்படியிருந்தும் கூட, முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கும் 2வது இன்னிங்ஸில் வெறும் 192 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகி 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி. ஆனால் அதேவேளையில், ஆஸ்திரேலிய அணியோ பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 473 ரன்களை குவித்ததுடன், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் இல்லாமலேயே இங்கிலாந்தை சுருட்டி வெற்றி கண்டது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில், வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்கும் 3வது டெஸ்ட் (பாக்ஸிங் டே டெஸ்ட்) போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் ஷேன் வார்ன்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்ன், இங்கிலாந்து அணி சரியான ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலிய கண்டிஷனில் கண்டிப்பாக ஒரு ஸ்பின்னரை எடுக்க வேண்டும். ஜாக் க்ராவ்லி, மார்க் உட், ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாக் லீச் ஆகிய 4 வீரர்களையும் அணியில் சேர்க்க வேண்டும் என்று ஷேன் வார்ன் வலியுறுத்தியுள்ளார்.
இவர்களுக்கு பதிலாக யார் யாரை நீக்க வேண்டும் என்பது குறித்து வார்ன் கருத்து கூறவில்லை.